Beech B200 Super King Air விபத்துக்குள்ளான இடம் pt web
உலகம்

Southend விமான நிலையத்தில் Beech B200 Super King Air விபத்து

இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

PT digital Desk

இங்கிலாந்தின் Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 Super King Air எனும் சிறிய விமானம் விழுந்து வெடித்தது. இந்த விமானம் நெதர்லாந்திலுள்ள Lelystad நோக்கி சென்றடைய வேண்டிய விமானமாகும். இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெற்றதாக எஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். இத்தகைய விமானத்தில் 9 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணிக்கலாம் என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால், விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனைபேர் இருந்தார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதேநேரம் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்தான தகவல்களும் வெளிவரவில்லை.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், விமானம் விபத்துக்கு உள்ளான இடம் கடும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன. இந்த விபத்தை நேரில் கண்டவரோ, விபத்தை நேரில் கண்டதிலிருந்து தனக்கு இன்னும் நடுக்கம் போகவில்லை எனத்தெரிவித்திருக்கிறார். விபத்தை நேரில் பார்த்த மற்றொரு நபரான ஜான்சன் விபத்து குறித்துப் பேசுகையில், “நாங்கள் விமானத்திலிருந்த பயணிகளை நோக்கி கையசைத்தோம். அவர்களும் எங்களை நோக்கி கையசைத்தனர். விமானம் மேலெழுந்த சில நொடிகளுக்குள் இடது புறமாக சாய்ந்து, தலைகீழாகக் கவிழ்ந்து தரையில் மோதியது. நான் உடனடியாக 999க்கு அழைத்து தகவலைத் தெரிவித்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விமான விபத்து Southend விமான நிலையத்தில் நடந்த இரண்டாவது Beechcraft விமான விபத்தாகும். முன்னதாக 1987-ல் வேறொரு Beechcraft விமானமும் விபத்துக்குள்ளாகியிருந்தது. அந்த விமானம் சரக்கு விமானம் என்பதால் விமானி மட்டும் விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

தீயணைப்பு மற்றும் அவசரப் பாதுகாப்புப் படையினர் விரைவாக விரைந்து சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகிலிருக்கும் Rochford Hundred Golf Club மற்றும் Westcliff ரக்பி மைதானங்கள் மூடப்பட்டிருக்கின்றன. விமான விபத்து காரணமாக Southend விமான நிலையத்தில் புறப்பட இருந்த நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மேலும், இரண்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டிருக்கின்றன. விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் முழு பயன்பாட்டுக்கு வரும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.