நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி இருப்பைச் சீரமைக்க, அமெரிக்காவிடம் 10 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பாகிஸ்தான் கோரியுள்ளது. அமெரிக்க - ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததைத் தொடர்ந்து, இந்த நிதி உதவியை வாஷிங்டனிடமிருந்து பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டாட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த நிலையில், அந்நாடு கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2020 முதல் அந்நாடு பொருளாதாரப் பிரச்னைகளை அதிகளவில் சந்தித்துவருகிறது. இதைச் சமாளிக்க உலக நாடுகளிடமும், சர்வதேச நிதியகத்திடமும் கடன் பெற்று வருகிறது. பாகிஸ்தான் தற்போது $7 பில்லியன் IMF திட்டத்தின்கீழ் கடுமையான வரிகள் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2023-இல் திவால் நிலையின் விளிம்பிற்குச் சென்ற பாகிஸ்தான், சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் நிதியுதவி மற்றும் கடன் புதுப்பித்தல் மூலமே தற்போதைக்குத் தப்பிப் பிழைத்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் விலைவாசி விண்ணைத் தாண்டி உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி இருப்பைச் சீரமைக்க, அமெரிக்காவிடம் 10 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பாகிஸ்தான் கோரியுள்ளது.
பாகிஸ்தான் நிதி அமைச்சர் முஹம்மது அவுரங்கசீப், அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட்டைச் சந்தித்து இந்தக் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை கடன்கள், நாணயப் பரிமாற்றங்கள் மற்றும் நிதி உத்தரவாதங்களைப் பெற பாகிஸ்தான் முயல்கிறது. மேலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிற அமைப்புகளின் அவசரகாலக் கடன்களை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும் முயல்கிறது. மேலும், சர்வதேச நிதிச் சந்தைகளில் மீண்டும் நம்பிக்கையைப் பெறுவதற்கும், தன் நாட்டின் கடன் தரவரிசையை உயர்த்தவும் பாகிஸ்தான் முயல்கிறது.
சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றமான சூழலின்போது, பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டது. இதன்மூலம் வாஷிங்டனில் தனக்குக் கிடைத்த ராஜதந்திர செல்வாக்கைப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தைச் சமாளிக்க டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து நிதி உதவியைப் பெற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த $10 பில்லியன் நிதி உதவிக்கான கோரிக்கை குறித்து அமெரிக்க அரசு இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அமெரிக்காவின், இந்த 'மாற்று உறுதிப்படுத்தல் நிதி' (Exchange Stabilization Facility) மிக அரிதாகவே பிற நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. முன்பு அர்ஜென்டினா, உருகுவே போன்ற நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.