அதிகமாய் கடன் வாங்கிய பாகிஸ்தான்.. மொத்தமாக 64 நிபந்தனைகளை விதித்த IMF!
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின்கீழ், சர்வதேச நாணய நிதியம், மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 18 மாதங்களில் பாகிஸ்தான் பூர்த்தி செய்ய வேண்டிய மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தான், கடுமையான நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதைச் சமாளிக்க உலக நாடுகளிடமும், சர்வதேச நிதியகத்திடமும் கடன் பெற்று வருகிறது. கடந்த 2020 முதல் பொருளாதாரப் பிரச்னைகளை அதிகளவில் சந்தித்துவரும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது பெரிய கடனாளியாக உள்ளது. அது, 1958 முதல் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 20க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு முதல் சுமார் 3.3 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் 39 மாத காலத்திற்கு தவணை முறையில் $7 பில்லியன் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடன் திட்டங்களின் ஒரு பகுதியாக, நேற்று 1.2 பில்லியன் டாலர்களை IMF விடுவித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின்கீழ், சர்வதேச நாணய நிதியம், மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 18 மாதங்களில் பாகிஸ்தான் பூர்த்தி செய்யவேண்டிய மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. ஐஎம்எஃப்பின் அறிக்கையின்படி, புதிய உத்தரவுகள் குறிப்பாக ஊழலை எதிர்த்துப் போராடுவது, நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் வரி அமைப்பைச் சீர்திருத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
அது வெளியிட்ட அறிக்கையின்படி முக்கிய நிபந்தனைகளாக, ’உயர்மட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரின் சொத்து விபரங்கள் குறித்த அறிக்கைகள், டிசம்பர் 2026க்குள் கட்டாயமாக ஓர் அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இதன் நோக்கம், அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கும் உண்மையான சொத்துக்களுக்கும் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் விளக்கப்படாத செல்வத்தைக் கண்டறிவது ஆகும். அடுத்து, ஊழல் அதிகமுள்ள 10 துறைகளில் உள்ள அபாயங்களைச் சமாளிப்பதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை அக்டோபர் 2026க்குள் பாகிஸ்தான் வெளியிட வேண்டும். இந்தச் சொத்து வெளிப்படுத்தல் கட்டாயம் மூத்த மாகாண அதிகாரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானிடம் பணம் அனுப்பும் செலவுகளையும் விரிவாக ஆய்வுசெய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது வெளிநாட்டு நிதியுதவியின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பதால், சர்வதேச நாணய நிதியம் பணம் அனுப்புவதில் கவனம் செலுத்துகிறது.
மேலும், வரும் ஆண்டுகளில் பணம் அனுப்பும் செலவுகள் 1.5 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் ஒரு செயல் திட்டத்தை வழங்குமாறு கடன் வழங்கும் நிறுவனம் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளது. சர்க்கரை சந்தை தாராளமயமாக்கலுக்கான தேசிய கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்லாமாபாத்தை சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், வணிக வங்கிகள் இந்தச் சொத்துத் தரவுகளை முழுமையாக அணுக அனுமதிக்கப்படும். இந்தக் கடுமையான நிபந்தனைகளுடன், பாகிஸ்தான் ஏற்கெனவே அமலில் உள்ள பிற சீர்திருத்தங்களையும் தொடர வேண்டும். அதன்படி, பணப் பரிமாற்றச் செலவுகளை மறுஆய்வு செய்தல், வரிச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லுதல், மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கான இறுதிச் செயல் திட்டத்தைத் தயாரித்தல், மின்சார கட்டண உயர்வுகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் அடுத்த தவணை நிதி, 64 நிபந்தனைகள் மற்றும் நிலுவையில் உள்ள மற்ற உறுதிமொழிகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தே உள்ளது என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.

