பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் IMF.. கேள்வி எழுப்பிய உமர் அப்துல்லா!
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் - இந்தியா இடையே போர் தீவிரமாய் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாகிஸ்தானுக்கு, கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது.
ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை பயங்கரவாத அமைப்புகளுக்குத்தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது என இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆகையால், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐஎம்எப் அமைப்பில் நடந்த ஓட்டெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது. இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப். சம்மதம் தெரிவித்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஐ.எம்.எப். பாகிஸ்தானிற்கு நிதியுதவி அளிக்க முன்வந்திருக்கும் சூழலில் அதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்தால் போர் பதற்றம் எப்படி குறையும்? இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியாவின் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் நிதி கொடுத்து உதவக்கூடாது” எனத் தெரிவித்தார்.