பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனினும், அந்நாட்டுப் பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இவ்விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, ‘பாதுகாப்புப் படைகளின் தலைவர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியாவிடம் பாகிஸ்தான் கடும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அனைத்துப் படைகளையும் வழிநடத்த வலுவான தளபதி தேவை என்ற நோக்கின் அடிப்படையில், இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத் தலைவர் முனீரை அதிகாரப்பூர்வமாக நியமிப்பார்.
இந்த நியமனம், இராணுவ மேலாதிக்கத்தை சட்டப்பூர்வமாக்குகிறது, கட்டளைச் சங்கிலி, அணுசக்தி அதிகாரம் மற்றும் நீதித்துறையைக்கூட அசிம் முனீரின் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது. இந்தத் திருத்தம் நீதித்துறையையும் இராணுவத்தின் வலையில் சிக்க வைக்கிறது. இந்த திருத்தத்திற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அசிம் முனீருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரத்தால், ஆட்சியையே அவர் கவிழ்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் அரசியலமைப்பு திருத்தங்களால் விளைவுகள் ஏற்படும் என ஐ.நாவும் எச்சரித்திருந்தது. ”பாகிஸ்தானின் அவசரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் நீதித்துறை சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த மாற்றங்களை, ஒன்றாக எடுத்துக்கொண்டால், நீதித்துறையை அரசியல் தலையீடு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அபாயம் உள்ளது" என்று ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக (CDF) பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமிக்கும் அறிவிப்பில் கையெழுத்திடுவதைத் தவிர்ப்பதற்காகவே, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டிலிருந்து வேண்டுமென்றே விலகி இருக்கிறார்” என்று பாதுகாப்பு நிபுணரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினருமான திலக் தேவாஷர் கூறியுள்ளார்.
ANI செய்தி நிறுவனத்துக்குப் பேசியுள்ள தேவாஷர், ”நவம்பர் 29 காலக்கெடு நெருங்கியதும், அதாவது முனீரின் மூன்று ஆண்டு இராணுவத் தளபதி பதவிக்காலம் முடிவடைந்த நாளான அன்று, மிகவும் புத்திசாலித்தனமாக ஷெரீப் பஹ்ரைனுக்கும் பின்னர் லண்டனுக்கும் புறப்பட்டுச் சென்றுள்ளார். அசிம் முனிருக்கு இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் பதவி வழங்கும் அறிவிப்பை வெளியிட அவர் விரும்பவில்லை என்பதால், அவர் வேண்டுமென்றே இதில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலைமை தொடர முடியாது. ராணுவத் தலைமைத் தளபதி இல்லாமல் அல்லது அணுசக்தி கட்டளை அதிகாரத்தின் பொறுப்பில் ஒருவர் இல்லாமல் அணு ஆயுதம் ஏந்திய நாடு இருக்க முடியாது. புதிய அறிவிப்பு எதுவும் உண்மையில் தேவையில்லை என்று சில ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். இது சர்ச்சைக்குரியது, நீதித்துறை அல்லது அரசாங்கம் இதை எப்படிப் பார்க்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் உண்மை என்னவென்றால், இது அவரது நிலைப்பாட்டை மிகவும் பலவீனமாக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முனீரின் மூன்று ஆண்டு இராணுவத் தளபதி பதவிக்காலம் கடந்த நவம்பர் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பாகிஸ்தானின் திருத்தப்பட்ட அரசியலமைப்பின்கீழ், ராணுவத் தலைவரின் பதவிக்காலம் சி.டி.எஃப் உடன் இணைந்ததாக மாறி ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். ஆனால் புதிய அறிவிப்பு நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து நிறைய விவாதங்களும் சர்ச்சைகளும் தொடருகின்றன. திருத்தத்தின்படி, இப்போது பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஒருவர் உள்ளார், மேலும் இராணுவத் தலைவரின் பதவிக்காலமும் CDF உடன் இணைந்ததாக இருக்கும் மற்றும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
2004ஆம் ஆண்டு இராணுவச் சட்டத் திருத்தத்தின்கீழ், இராணுவத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன்படி, முனீர் மூன்று ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இன்னும் 2 ஆண்டு பதவிக் காலம் எஞ்சியுள்ளது. இதற்கிடையே புதிய அறிவிப்பு இன்னும் நிலுவையில் உள்ளதாலும், அரசாங்கம் மௌனம் காத்து வருவதாலும் இந்த விவாதங்கள் பாகிஸ்தான் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளன.