அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. உலகையே பதறவைத்த அவரது ஓராண்டு ஆட்சி குறித்த ஒரு மீள் பார்வை குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
இப்படியும் ஒரு தலைவர் இருப்பாரா எனுமளவுக்கு ஓராண்டில் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் அமைந்தன. சர்வ பலம் படைத்த அரசுகள் முதல் சாமானியர்கள் வரை ட்ரம்ப்பின் அதிரடிகளால் பாதிப்புக்குள்ளாயினர். இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்த ட்ரம்ப், அடுத்து வெனிசுலாவில் புகுந்து அதன் அதிபரையே சிறைப்பிடித்தார். கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் தணியா ஆர்வம் கொண்ட ட்ரம்ப், இதற்காக தங்கள் நெடுங்கால நண்பனான ஐரோப்பாவையே பகைத்துக்கொண்டுள்ளார்.
உக்ரைன் அதிபரை அழைத்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மிரட்டிய விதம் உலகையே அதிர வைத்தது. மறுபுறம் 8 போர்களை நிறுத்திவிட்டதால், தனக்கு நோபல் பரிசு வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அது கிடைக்காமல் போனதால் அப்பரிசு யாருக்கு கிடைத்ததோ, அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டார் ட்ரம்ப்.
சீனா, இந்தியா, கனடா என பல நாடுகளுக்கும் வரிகளை சராமாரியாக அறிவித்து கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம் செய்து உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணவைத்தார். ட்ரம்ப்பின் நகர்வுகள் தங்கம் வரலாறு காணாத அளவு உயர முக்கியக் காரணமாக அமைந்தது. மறுபுறம், பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்காவெளியேறியது. ஆப்பிரிக்க ஏழை மக்களுக்கான உணவு, மருத்துவத்திற்கான நிதியையும் நிறுத்தினார் ட்ரம்ப்.
வெளிநாடுகளுக்குத்தான் இப்படி பிரச்சினை என்றால், உள்நாட்டில் அரசு நிர்வாகத்தில் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் ஒரேநாளில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இது பெரும் போராட்டங்களுக்குக் காரணமானது. அமெரிக்காவில் குடியேறுவதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப் எப்போது என்ன செய்வார் என சற்றும் கணிக்க முடியாத சூழல் உள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற அச்சம் எண்ணமே மேலோங்குகிறது.