ஜப்பானின் “முதியோரை மதிக்கும் நாள்” முன்னிட்டு வெளியான புள்ளிவிவரங்கள், 100 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சத்தை கடந்துள்ளதாக காட்டுகின்றன; இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். நீண்ட ஆயுள், மேம்பட்ட மருத்துவம் மற்றும் வாழ்க்கைமுறையின் வெற்றியை வெளிப்படுத்தினாலும், 1.14 என்ற குறைந்த கருத்தரிப்பு விகிதம், 2070-க்குள் மக்கள் தொகை 8.7 கோடியாகக் குறையும் அபாயம், தொழிலாளர் பற்றாக்குறை, ஓய்வூதியம் மற்றும் முதியோர் பராமரிப்பில் பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது.
உலகின் நீண்ட ஆயுட்காலம் கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது என அந்நாட்டின் சுகாதார மற்றும் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, அந்நாட்டின் மருத்துவத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உணவு முறைகள் ஆகியவற்றை குறிப்பிடுவதாக இருந்தாலும், அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையும், குறைந்து வரும் பிறப்பு விகிதமும் ஜப்பானுக்கு புதிய சமூக மற்றும் பொருளாதார சவால்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தான், 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஜப்பானில் தொடர்ந்து அதிகரித்து வருவது சாதனையா? அல்லது சவாலா? எனக் கேள்வி எழுந்திருக்கிறது.
ஜப்பானின் வருடாந்திர "முதியோரை மதிக்கும் நாள்" (Respect for the Aged Day) பொதுவிடுமுறையை முன்னிட்டு இந்தப் புதிய புள்ளிவிவரங்களை அந்நாட்டின் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டு மட்டும், 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 677 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள். அதேசமயம், ஜப்பானின் மக்கள் தொகையில் தற்போது 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சுமார் 29.4 சதவீதமாக உள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட 10 பேரில் 3 பேர் முதியவர்கள். இந்த விகிதம் 2070-ம் ஆண்டுக்குள் சுமார் 40 சதவீதத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கென்இச்சிரோ உயேனோ (Kenichiro Ueno), ஜப்பானின் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டியதுடன், அதிகமானோர், நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் பலர் வாழ்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ஜப்பானியர்களின் நீண்ட கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை முக்கிய பங்கு வகிக்கின்றன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், ஜப்பானில் முதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருமணம் மீதான ஆர்வமின்மை, அதிக பெண்கள் வேலைக்குச் செல்வது போன்ற காரணங்களால் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது அந்நாட்டிற்கு மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு நிலையான மக்கள் தொகையைப் பராமரிக்க 2.1 என்ற குழந்தைப் பிறப்பு விகிதம் தேவைப்படுகிறது. ஆனால், 2025-ல் ஜப்பானின் கருத்தரிப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்து 1.14 ஆக பதிவாகியிருக்கிறது. மேலும், ஜப்பானின் மக்கள் தொகை 2008-ல் சுமார் 12.8 கோடியாக உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால், 2070-க்குள் அது சுமார் 8.7 கோடியாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், வேலை செய்யும் வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதுடன், இதன் தாக்கம் ஓய்வூதியம், மருத்துவம், முதியோர் பராமரிப்பு மற்றும் தொழிலாளர் சந்தை என பல துறைகளிலும் எதிரொலிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், கட்டுமானம் முதல் விவசாயம், போக்குவரத்து, சுகாதாரம் வரை பல துறைகள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. பிரதமர் சனாயே தாக்கிச்சி, மக்கள்தொகை சரிவை "அமைதியான அவசரநிலை" என்று விவரித்துள்ளார்.
அதனால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது ஒரு சாதனை என்றாலும்.. பிறப்பு விகிதம் குறைந்து, இளைஞர்களின் எண்ணிக்கை சரிவது ஜப்பானின் சமூக அமைப்பு அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.