கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தின் போது இருந்ததை விட, இந்த ஆண்டு அதிகமான அமெரிக்கர்கள் பசியால் வாடுகின்றனர் என்று நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆய்வு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார், 1200 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், செலவுகளைச் சமாளிக்க நீங்கள் சேமிப்பு அல்லது அவசரக்காலக் கணக்குகளிலிருந்து பணம் எடுக்க வேண்டியிருந்ததா? போதிய உணவு கிடைக்காமல் சிரமப்படுகிறீர்களா? உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா? மற்றும் மளிகைப் பொருட்களுக்கு அரசின் உதவியை பெற வேண்டிய தேவை இருக்கிறதா? உள்ளிட்ட கேள்விகள் எழுப்பட்டது.
இந்தசூழலில், இந்த ஆய்வின் மூலம் கிடைத்த மக்களின் பதில்கள் தற்போது, அமெரிக்காவில் பசி ஒரு பரவலான மற்றும் முக்கிய பிரச்சனையாக உயர்ந்திருப்பதை காட்டியிருக்கிறது. அதன்படி, 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்தபோது 4 சதவீத குடும்பங்கள் மட்டுமே “எங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை” அல்லது “குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை” என்று கூறியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்ந்துள்ளது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதேபோல, 2020 கொரோனா காலத்தில் 21.8% குடும்பங்கள் சேமிப்பை பயன்படுத்தியதாக தெரிவித்திருந்ததாகவும், அது தற்போது 33% ஆக உயர்ந்துள்ளளதாகவும் இந்த அறிக்கை கூறுவதுடன் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலை உயர்வு காரணமாக, கோடிக்கணக்கான குடும்பங்கள் உணவுக்கே போராடும் நிலை உருவாகியுள்ளதாக நியூயார்க் ஃபெட் ஆய்வு எச்சரித்துள்ளது. இதில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், குறைந்த கல்வி பெற்றவர்கள் மற்றும் சிறிய குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க பொருளாதாரம் வெளிப்படையாக வளர்ச்சியடைந்தாலும், சமூகத்தின் ஒரு பெரிய பகுதி கடும் பொருளாதார அழுத்தத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், ஈரான் போர் காரணமாக எரிசக்தி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதும் அமெரிக்க மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உணவு விலை உயர்வு, வேலை வாய்ப்பு குறைவு மற்றும் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக மக்கள் மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூயார்க் பெடரல் வங்கியின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.