ஈரான் போரால் ஆயுதங்களை இழந்து நிற்கும் அமெரிக்கா.. சீனாவை எப்படி எதிர்கொள்ளும்?
ஈரான் போரில் டொமஹாக், பேட்ரியாட், தாட் ஏவுகணைகளை பெருமளவில் பயன்படுத்தியதால் அமெரிக்காவின் முக்கிய ஆயுத இருப்புகள் காலியாகி, அவற்றை மீண்டும் நிரப்ப குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என CSIS ஆய்வு எச்சரிக்கிறது. இதனால் தைவான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய மோதல் வெடித்தால், அமெரிக்கா முழுத் தயார்நிலையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செய்தியாளர் - எம். மீரா
அமெரிக்காவின் இராணுவ வல்லமை அசைக்க முடியாததாகத் தோன்றலாம்; ஆனால் திரைக்குப் பின்னால், ஈரானுடனான பல மாதப் போருக்குப் பிறகு, தனது மிக முக்கியமான ஆயுதக் கிடங்குகளில் சிலவற்றை மீண்டும் நிரப்புவதற்குப் பென்டகன் தற்போது காலமில்லாமல் தவித்து வருகிறது.
ஈரான் மோதலின் போது அமெரிக்கா, டோமஹாக் குரூஸ் ஏவுகணைகள், பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் மற்றும் தாட் (THAAD) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைப் பெருமளவில் நம்பியிருந்தது. இந்த ஆயுதங்கள், இலக்குகளைத் தாக்க, ஏவுகணைகளை இடைமறிக்க மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளப் நட்பான வளைகுடா நாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்டன.
சிஎஸ்ஐஎஸ் (CSIS) மதிப்பீடுகளின்படி, ஈரான் போரின்போது அமெரிக்கா 1,000-க்கும் மேற்பட்ட டோமாஹாக் ஏவுகணைகளைச் பயன்படுத்தியுள்ளது . தற்போதைய உற்பத்தி வேகத்தில், இந்த ஏவுகணை அமைப்புகளை மீண்டும் உருவாக்க 2030-ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை ஆகலாம்.
2027-ஆம் ஆண்டிற்காக, 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு பட்ஜெட்டை டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்திருக்கிறது. இதன்படி அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சிக்கல் இனி பணம் அல்ல. ஆயுதங்களை தாயாரிக்கும் வேகமே ஆகும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஈரான் போரில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் போதுமான வெடிமருந்துகள் உள்ளன என்றும் போர் விரிவடைந்தால் அமெரிக்காவால் சமாளிக்க முடியாது என்றும் கூறுகிறது இந்த ஆய்வு.
மற்றொரு பெரிய போருக்கு, குறிப்பாக தைவான் விவகாரத்தில் சீனாவுடன் ஏற்படக்கூடிய ஒரு மோதலுக்கு, அமெரிக்கா தயாராக இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த ஆய்வு.
தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கோரி வரும் நிலையில், அமெரிக்கா தைவானுக்கு ஆயுத உதவிகளையும், அரசியல் ஆதரவையும் வழங்கி வருகிறது இதனால் வாஷிங்டனுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
2027-ஆம் ஆண்டுக்குள் தேவைப்பட்டால் தைவானை பலவந்தமாகக் கைப்பற்ற தனது இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று சீனா மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. தைவானுடனான உறவுகளை மோசமாகக் கையாள்வது, சீனாவையும் அமெரிக்காவையும் நேரடி மோதலுக்குத் தள்ளக்கூடும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

