அடுத்த 5 ஆண்டுகளில்., வரலாற்றில் மிக வெப்பான ஆண்டுக்கு வாய்ப்பு.. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு பயன்பாடு, கார்பன் டையாக்சைடு உமிழ்வு, காடுகள் அழிப்பு ஆகியவை உலக வெப்பநிலையை ஆபத்தான அளவில் உயர்த்தி, பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன. ஆர்டிக் பகுதி வேகமாக சூடாகி கடல் மட்ட உயர்வை தூண்ட, பசிபிக் கடல் வெப்பமாதலால் உருவாகும் சக்திவாய்ந்த எல்-நினோ 2027 வரை நீடித்து, இந்தியாவில் வெப்ப அலை, தண்ணீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு, மின்சார தேவை உயர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாக அறிக்கை எச்சரிக்கிறது.
உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2026 முதல் 2030 வரை உலக சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்றும், அந்த காலகட்டத்தில் குறைந்தது ஒரு ஆண்டு இதுவரை பதிவான மிக அதிக வெப்பமான ஆண்டுகளை விட அதிக வெப்பத்தை பதிவு செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், உலக வெப்பநிலை உயர்வை 1.5°C க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பாரிஸ் காலநிலை ஒப்பந்த இலக்கை மீறக்கூடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவைகளின் அதிகப்படியான பயன்பாடு, கார்பன் டையாக்சைடு உமிழ்வு மற்றும் காடுகள் அழிப்பு ஆகியவை இந்த வெப்பநிலை உயர்விற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இதனால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து, பூமியின் வெப்பம் வெளியேறாமல் சிக்கிக் கொள்கிறது. இந்த வெப்பநிலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் கடும் வெப்ப அலைகள், வறட்சி, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆர்டிக் பகுதி உலக சராசரியை விட வேகமாக அதிகரிக்கக்கூடும் என்பதால் கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மேலும் மோசமடையலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பசிபிக் பெருங்கடல் வெப்பமாதலால் இந்த ஆண்டு குளிர்காலத்தில் உருவாகும் சக்திவாய்ந்த 'எல்-நினோ' தாக்கம், வரும் 2027ஆம் ஆண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் இந்தியாவிலும் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து, தண்ணீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு மற்றும் மின்சார தேவையில் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகக்கூடும் என்றும் அந்த அறிக்கை கூறுவதுடன் உலக நாடுகள் உடனடியாக கார்பன் உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், காலநிலை மாற்றத்தின் தாக்கம் மேலும் தீவிரமடையலாம் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.

