ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தை மாற்றும் புதிய திட்டத்தில் ஈரான்–ஓமன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கப்பல் போக்குவரத்து பாதுகாப்புக்காக தற்காலிக கடல் பாதை உருவாக்க முயற்சி நடக்கிறது. ஓமன் முன்மொழிந்த சம பகிர்வு யோசனையை ஈரான் நிராகரித்து, கண்காணிப்பு அதிகாரம், கட்டண முறையில் அதிக கட்டுப்பாடு கோருகிறது. அமெரிக்கா சுதந்திர போக்குவரத்துக்கு வலியுறுத்துகிறது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தாலும், தற்போது அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால வழித்தடம் தொடர்பாக ஓமனுடன் மட்டுமே ஆலோசனை நடைபெற்று வருவதாக ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, 'ஓமானுடன் இணைந்து, கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக கடல் பாதையை விரைவாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்' என்றார். வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியும், இரு நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் வகையில் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை, உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாகும். உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியின் பெரும்பகுதி இந்த வழியாகவே நடைபெறுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து முறை, எதிரெதிர் திசையில் செல்லும் கப்பல்களுக்கு தனித்தனி வழித்தடங்களை வழங்குகிறது. ஆனால், புதிய திட்டத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வணிகக் கப்பல் போக்குவரத்தை ஈரானும் ஓமனும் இணைந்து ஒருங்கிணைக்கும் முறையை ஓமன் முன்மொழிந்துள்ளது. இது மலாக்கா நீரிணையில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து செயல்படும் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை இரு நாடுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் ஓமனின் யோசனையை ஈரான் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, ஹோர்முஸ் நீரிணையின் இரு திசைகளிலும் செல்லும் கப்பல்களின் கண்காணிப்பில் அதிக அதிகாரம் ஈரானுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தனி முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. மேலும், வணிகக் கப்பல்களுக்கு முன்கூட்டிய அறிவிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டண முறையையும் ஈரான் பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையில், சர்வதேச கப்பல் போக்குவரத்து சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அண்மையில் ஓமன் கடற்கரைக்கு அருகே சென்ற சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற பொருளால் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.