‘இனி எதுவுமே மிஞ்சாது’.. திடீரென பல்டி அடித்த ஈரான்.. கோபத்தில் ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு!
ஈரான் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான்-அமெரிக்க போர், இன்றுவரை முடியாமல், நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்தப் போரால், அந்த இரு நாடுகள் மட்டுமின்றி, அதனைச் சார்ந்திருக்கும் மற்ற நாடுகளும் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இயற்கை எரிவாயுவில் இறக்குமதியையே நம்பியுள்ள இந்தியா மாதிரியான நாடுகள், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் இயற்கை எரிவாயு அதிக விலை ஏற்றத்தைக் கொண்டிருப்பதால், ட்ரம்ப் மீது அந்நாட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் ராணுவ முயற்சிகளையும், டிப்ளமேடிக் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
இதற்கிடையே, ஈரானுக்கு எதிராக இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தற்காலிகமாக அந்தத் தாக்குதலை ஒத்திவைத்து, ஈரானுக்கு மேலும் சில வாய்ப்புகள் வழங்குவதாக அவர் அறிவித்திருந்தார்.
இப்படியான சூழலில், ட்ரூத் என்ற சமூக வலைதளப் பக்கத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஈரானின் தலைவர்கள் தங்களுக்குப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பொதுவெளியில் தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஓமன் நாட்டுடன் மட்டுமே பேசி வருகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுகின்றனர் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் அளிக்கும் விளக்கங்களை வெற்றுப் பேச்சுக்கள் என்று நிராகரித்த ட்ரம்ப், அந்தப் பகுதி முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும், அமெரிக்காவின் 'எஃகு சுவர்' போன்ற கடற்படை முற்றுகையிலும்தான் இயங்குகிறது என்றார். அமெரிக்கா அனுமதித்தால் மட்டுமே அங்கு எதுவும் நடக்கும் என்றும் அவர் எச்சரித்தார். ஈரான் எக்காலத்திலும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஓர் ஒப்பந்தம் ஏற்படும்வரை அல்லது அவர்கள் முற்றிலுமாகச் சரணடையும்வரை இந்த ராணுவ மற்றும் பொருளாதார முடக்கம் தொடரும் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

