\
Mojtaba Khamenei & Masoud Pezeshkian
Mojtaba Khamenei & Masoud PezeshkianReuters

அதிபர் பெஷெஷ்கியன், காமேனி இடையே மோதல்..? ஈரானில் வெடிக்கிறது அதிகாரப் போர்?

அமெரிக்கா–ஈரான் மறைமுக பேச்சுவார்த்தை நடுவே, அதிபர் பெஷெஷ்கியன்–உச்சத் தலைவர் காமேனி மோதல் தீவிரம்; IRGC செல்வாக்கு உயரும் நிலையில் பதவி விலகல் சாத்தியம் அதிகரித்துள்ளது.
Published on
Summary

ஈரான் அணு ஆயுத குற்றச்சாட்டை மையமாகக் கொண்டு அமெரிக்கா-ஈரான் மோதல் நீடிக்க, டிரம்ப் திட்டமிட்டிருந்த பெரிய ராணுவத் தாக்குதல் வளைகுடா நாடுகளின் வேண்டுகோளால் ஒத்திவைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இல்லை என்றாலும், கத்தார், பாகிஸ்தான் வழியாக மறைமுக தொடர்புகள் நடப்பதாக இஸ்ரேலிய ஊடகம் கூறுகிறது. இதன் நடுவில் அதிபர் பெஷெஷ்கியன், காமேனி, IRGC இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

செய்தியாளர் - M.மீரா

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சு வார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது.

Trump
TrumpANI

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டிருந்ததாக கூறியிருந்தார். இருப்பினும், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தற்காலிகமாக அந்தத் தாக்குதலை ஒத்திவைத்ததாக அறிவித்திருந்தார்.

மேலும் ஈரானின் தலைவர்கள் தங்களுக்குப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கெஞ்சிக் கேட்கின்றனர் என்றும் கூறியிருந்தார். இந்தக் கூற்றை ஈரான் பொய் என்று மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் பொதுவெளியில் மறுப்புகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் மறைமுகத் தொடர்புகள் தொடர்கின்றன என்று இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது.

Abbas Araqchi
Abbas AraqchiReuters

அறிக்கையின்படி, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போது எந்தவொரு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இருப்பினும், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி மற்றும் ஸ்டீவ் விட்கோஃப், ஜாரெட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் வாயிலாக மறைமுகமாக பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கூறுகிறது இச்செய்தி. கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்புகளுக்கு வசதி செய்து தருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் மற்றும் ஈரானின் மூத்த அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவுடனான மோதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் ஈரானுக்குள் ஒரே கருத்து இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Masoud Pezeshkian
Masoud PezeshkianReuters

தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான கொள்கைக் கருத்து வேறுபாடுகளின் போது, ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் பலமுறை பதவி விலகுவதாக அச்சுறுத்தியதாக சேனல் 14 வெளியிட்ட செய்தி கூறுகிறது.

ஆனால் இப்போது மீண்டும் ராஜினாமா செய்வதாக கூறினால் அதை ஏற்றுக்கொள்வோம் என்று காமேனி கூறியுள்ளார். இந்தத் தகவல் ஈரான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான பெயர். IRGC – ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை. இஸ்ரேலிய ஊடக அறிக்கையின்படி, அமெரிக்கா தொடர்பான முக்கிய முடிவுகளில் IRGC-யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மேலும் குறிப்பாக, IRGC தளபதியின் கடுமையான நிலைப்பாட்டுக்கு காமேனி ஆதரவு அளிப்பதாகவும் ஈரானின் வெளியுறவுக் கொள்கையை முடிவு செய்வதில் அதிபர் பெஷெஷ்கியனை விட IRGC மற்றும் உச்சத் தலைவர் வட்டாரத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் பதவி விலகலாம் என்ற தகவல் அந்நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mojtaba Khamenei & Masoud Pezeshkian
டிரம்புக்கு எதிராக வளைகுடா நாடுகள் திரும்பியது ஏன்..? ஈரான் போரில் பரபரப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com