இலங்கைக்கு காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு web
உலகம்

தத்தளிக்கும் இலங்கை.. கெட்டுப்போன பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்..? நடந்தது என்ன?

டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இலங்கை தத்தளித்து வரும்நிலையில், கெட்டுப்போன பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதாக செய்தி வலம்வருகிறது.. என்ன நடந்தது பார்க்கலாம்..

PT WEB

’டிட்வா' புயல் காரணமாக அண்டை நாடான இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு உதவுவதாக கூறி பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை நிவாரணமாக அனுப்பி இருப்பது சர்ச்சையாகி கடும் கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.

கோரத்தாண்டவம் ஆடிய டிட்வா புயல்..

தென்மேற்கு வங்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை புரட்டிப்போட்டது. இந்த புயல் தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதி வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதனால் இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது.

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கை

இடைவிடாது கொட்டிய கனமழையால் வெள்ளத்தில் மிதந்து வரும் தீவு தேசமான இலங்கையில் தற்போது வரை 450க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். பல ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடரில் சிக்கி உள்ள இலங்கைக்கு இந்தியா சார்பில் ‛ஆபரேஷன் சாகர் பந்து' என்ற யெபரில் டன் கணக்கில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. விமானப்படை, கப்பற்படை மூலமாக இந்த நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மழை

அதுமட்டுமின்றி INS விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பல், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இலங்கைக்கு உதவி செய்து வருகின்றனர். மீட்பு பணி இந்தியா சார்பில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இலங்கையில் சிக்கி தவித்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கெட்டுப்போன உணவை அனுப்பியதா பாகிஸ்தான்..

இந்தியாவை போலவே பாகிஸ்தானும், இலங்கையில் உள்ள பாகிஸ்தானின் தூதரகம் வழியாக நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. பாகிஸ்தான் சார்பில் இலங்கைக்கு மருந்து, மாத்திரை, உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்கள் தொடர்பான போட்டோவை இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. அதில், "எப்போதும் இலங்கையுடன் பாகிஸ்தான் இருக்கும். இன்றும் இலங்கையுடன் நாங்கள் நிற்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது. அந்த போட்டோவில் பாகிஸ்தான் அனுப்பிய பொருட்களின் பையில் காலாவதி தேதி இடம்பெற்றது. அந்த தேதி ஏற்கனவே முடிந்து இருந்ததை கண்டுபிடித்த நெட்டிசன்கள் பாகிஸ்தானை வறுத்தெடுத்தும் கண்டங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த பதிவை பாகிஸ்தான் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.