இலங்கை ’டிட்வா’ புயலின் கோரமுகம்| 355 பேர் பலி.. 366 பேர் மாயம்.. 11 லட்சம் மக்கள் பாதிப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கடும் பேரழிவை ஏற்படுத்தி 355 உயிரிழப்புகளும், 366 பேர் காணாமல் போனதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, பதுளை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலால் அண்டை நாடான இலங்கை மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளது.. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டிட்வா புயலின் தாக்கத்தால் மிகப்பெரிய மழைபொழிவை சந்தித்த இலங்கையில், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் இதுவரை 355 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திச்சென்ற இயற்கை பேரழிவில் சிக்கி இறந்தோர்களின் எண்ணிக்கை 355ஆக அதிகரித்துள்ளதாகவும், அதனுடன் 366 பேரின் நிலை என்னவென்றே தெரியாமல் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதிகப்படியான உயிரிழப்புகள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது.. கண்டி மாவட்டத்தில் 88 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர், பதுளை மாவட்டத்தில் 71 பேர், குருநாகலில் 37 பேர் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 23 பேரும் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது..
மேலும் மோசமான வானிலை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ள அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..

