ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மௌனமாக இருப்பது சர்ச்சையாகியுள்ளது. நெதன்யாகு ஆதரவு ஊடகங்கள் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தையும், கத்தாரின் நடுவர் வேடத்தையும் கடுமையாக விமர்சிக்கின்றன. அமெரிக்கா இஸ்ரேலை தனிமைப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழ, ட்ரம்ப் பலவீனமான தலைவராக சித்தரிக்கப்படுகிறார்.
செய்தியாளர் ; m. மீரா
ஈரான் - அமெரிக்க போர் முடிவடைந்ததாகவும், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதுகுறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இன்னும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், இஸ்ரேல் அரசாங்க ஆதரவு ஊடகங்கள் அமெரிக்கா மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கத்தார் அதிகாரிகள் மீதும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
ஈரான் தொடர்பான மோதலின் தொடக்கத்தில் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டபோது இஸ்ரேலில் இருக்கும் வலதுசாரித் தரப்பினரிடமிருந்து அவருக்கு பாராட்டுகள் கிடைத்தது. ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக, தற்போது ட்ரம்ப் மீது எதிர்ப்பு நிலைப்பாடு எழுந்துள்ளது.
நெதன்யாகு ஆதரவு சேனல் 14-இன் முன்னணித் தொகுப்பாளரும் பத்திரிகையாளருமான யினோன் மாகல், X தளத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார் என்றும், துணை அதிபர் ஜே.டி.வேன்ஸை ஓர் அயோக்கியன் என்றும் பதிவிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகளுக்காக ட்ரம்பால் நியமிக்கப்பட்ட தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இஸ்ரேலில் உள்ள தங்கள் சகோதரர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் அவர்களை கத்தார் விலைக்கு வாங்கி விட்டதாகவும் இஸ்ரேல் தனித்து விடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது இஸ்ரேலின் சேனல் 14. தொலைக்காட்சி .
(முன்னதாக, ட்ரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்ட மூத்த அமெரிக்க அதிகாரிகளை இஸ்ரேலிய உளவு அமைப்புகள் கண்காணித்து வந்தது என்றும் அவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்டது என்றும் கூறப்பட்டது) .
சேனல் 14-இன் மற்றொரு அறிவிப்பாளரான ஷிமோன் ரிக்லின் சமூக ஊடகங்களில், ட்ரம்ப் அமெரிக்காவை முன்னெப்போதையும்விட பலவீனமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலின் சேனல் 12-ஐச் சேர்ந்த முக்கிய வலதுசாரி அரசியல் ஆய்வாளரான அமித் சேகல், அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானதுதான்; ஆனால் அமெரிக்காவின் நண்பராக இருப்பது உயிருக்கே ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
ட்ரம்பிற்கும் - நெதன்யாகுவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்தியதற்காக குஷ்னர் மற்றும் விட்காஃப் மீது நெதன்யாகு தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டியுள்ளதாக சிஎன்என்- செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஈரானுக்கு அஞ்சி, இஸ்ரேலுக்கும் -அமெரிக்காவுக்கும் இடையிலான இடைவெளிகளை விரிவுபடுத்தும் நிலைப்பாடுகளை கத்தாரும் முன்னெடுத்தது என்று நெதன்யாகு நம்புகிறார் என்றும் அச்செய்தி கூறுகிறது.
லெபனான் மீதான தாக்குதல் தொடரும் - நெதன்யாகு
இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'Ynet' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, லெபனானிலிருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை என்றும், ஈரானுடனான ஒப்பந்தத்தில் லெபனான் தொடர்பான அம்சங்களை ஏற்றுச் செயல்பட வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிபர் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுப்பதோடு, அந்த அமைப்பின் மீதும் தாக்குதல்களைத் தொடரப்போவதாக நெதன்யாகு ட்ரம்ப்பிடம் கூறியதாக 'Ynet' செய்தி வெளியிட்டுள்ளது. தனது இந்த நிலைப்பாடுகளுக்கு இஸ்ரேலிய அமைச்சரவையிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் 'Ynet' குறிப்பிட்டுள்ளது.