செய்தியாளர்: ஐடா அருட்செல்வி
40 வயதான பிரியா அதிகாரி, நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன். நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகிறார் பிரியா. இந்த நிலையில், பிரபல செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இமயமலை போன்ற உயரமான பகுதிகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருந்தபோதிலும், தற்போதைய மீட்புப் பணியின் அளவு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல விமானங்களை இயக்குவதால் மீட்புக் குழுவினர் கடுமையாக சோர்வடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், “ரசுவா மாவட்டத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட திமுரே கிராமத்தைச் சுற்றி சுமார் 20 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஒரே நேரத்தில் பல ஹெலிகாப்டர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபடுவதால், விமானிகளுக்கிடையேயான வானொலி தகவல் தொடர்பும் ஒருங்கிணைப்பும் முக்கியப் பணியாகியுள்ளது. வெள்ளம்விட்டுச் சென்ற அடர்த்தியான சேறு காரணமாக சில இடங்களில் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பாக தரையிறக்கி நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், இன்ஜினை இயக்கியபடியே உள்ளிருப்பவர்களை வெளியேற்ற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “திமுரே பகுதியில் முதல் இரண்டு நாட்களில் 200-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். அங்கு ஏற்பட்ட அழிவைப் பார்த்தபோது, 'எல்லாமே அழிந்துவிட்டது; ஐந்து நீர்மின் நிலையங்கள் அழிந்துவிட்டன; உயிர்களும் பறிபோயுள்ளன' என வேதனை தெரிவித்துள்ளார்.
எனினும், மீட்புக்காக காத்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது நம்பிக்கை ஏற்படுவதாகவும், 'நீங்கள் உயிர் பிழைத்துவிட்டீர்கள்' என்று அவர்களிடம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளத்தின் பாதிப்பு, 2015-ம் ஆண்டு நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தைவிட மிகப்பெரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் அறிவியல் படித்த பிரியா, பின்னர் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றினார். ஹெலிகாப்டர் பயணத்தின்போது விமானம் ஓட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் சென்று பயிற்சி பெற்றார். 2017-ல் முழுநேர ஹெலிகாப்டர் பைலட்டான அவர், பின்னர் இமயமலைப் பகுதிகளில் உயரமான இடங்களில் நடைபெறும் மீட்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்றார். எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கிய மலையேற்ற வீரர்களையும் மீட்டுள்ள அவர், சுமார் 6,200 மீட்டர் உயரம் வரையிலும் மீட்பு விமானங்களை இயக்கியுள்ளார் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.