இளைஞர்களின் போராட்டம் காரணமாக நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி கடந்த ஆண்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, 2026 மார்ச் 5- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 35 வயதேயான பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன்மூலம், ராப் பாடகரும் முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா நேபாளத்தின் 47-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இந்தசூழலில், தான் நேற்று நாடாளுமன்றத்தில் பாலேந்திர ஷா பிரதமராக தனது முதல் உரையை ஆற்றியிருக்கிறார். அதில், நேபாள - இந்திய எல்லைப் பிரச்னை குறித்துப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, ”காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட நேபாள பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளது குறித்து, இந்திய அரசுக்கு நேபாளம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நீண்ட காலமாக உள்ள இந்த எல்லை பிரச்னை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும். இந்தியா நேபாள பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதைப் போலவே, நேபாளமும் சில இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. மேலும், இந்த எல்லைப் பிரச்னை பிரிட்டன் ஆக்கிரமிப்பு காலத்தில் இருந்தே இருக்கும் நிலை, இந்த பிரச்னை குறித்து பிரிட்டன் அரசுக்கு தனது அரசு கொண்டு செல்லும் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தசூழலில் தான், நேபாளமும் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது எனக் கூறிய அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா கருத்துக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். எனினும், இச்சர்ச்சைக்கு விளக்கமளித்த நேபாள வெளியுறவு அமைச்சகம், "பிரதமர் குறிப்பிட்டது நாட்டின் எல்லை ஆக்கிரமிப்பை அல்ல; எல்லையோரப் பகுதிகளில் இரு நாட்டு விவசாயிகளும் மாற்றி மாற்றிப் பயிர் நிலங்களைப் பயன்படுத்துவதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்" என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,850 கி.மீ.க்கும் அதிகமான மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை பல தசாப்தங்களாக இருந்து வரும் நிலையில், கடந்த, 2020 ஆம் ஆண்டு அப்போதைய நேபாள பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு இந்திய எல்லைக்குட்பட்ட காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை இணைத்து திருத்தப்பட்ட புதிய நேபாள வரைபடம் ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதற்கு, இந்தியா தரப்பிலிருந்ததும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, சமீபத்தில் அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருந்த வரைபடத்திலும் இந்திய பகுதிகள் இணைக்கப்பட்டிருந்தன. நேபாள அரசு மீண்டும் இந்தியப் பகுதிகளை உரிமைகோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றும் நேபாள எல்லைப்பிரச்சனை விவாதத்திற்கு வந்துள்ளது.