வெள்ள மீட்பு X
உலகம்

வெள்ளத்திற்கு பிறகான 11 வது நாள்.. இடிபாடுகளில் சிக்கிய 60 வயது மூதாட்டி.. உயிருடன் மீண்ட அதிசயம்!!

பேரழிவால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், 11 நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Premkumar S

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, சுமார் 11 நாட்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் போராடிய 60 வயது பெண் ஒருவர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பேரழிவால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், 11 நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளம் சீனா எல்லையில் உள்ள இமயமலை பகுதியில், பனிப்பாறை சரிவு காரணமாக நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல மீட்டர் உயரத்திற்கு நீர் பெருக்கெடுத்து பாய்ந்ததில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 5,000 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை, மீட்கும் பணி 11 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச்சூழலில் தான் இன்று, நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி பகுதியில் இடிந்து விழுந்த நான்கு மாடிக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 வயதான சந்திகா ஸ்ரேஷ்டா (Chandrika Shrestha) என்ற பெண், சுமார் 11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கட்டிடத்தின் மேல் தளத்தில் இடிபாடுகளுக்கு அடியில் அவர் சிக்கியிருந்ததாகவும், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு அவரை பத்திரமாக வெளியே கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேல் திரிசூலி-1 நீர்மின் திட்டப் பகுதியில் அமைந்திருந்த சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, சீன நாட்டைச் சேர்ந்த ஊழியரான லுஹைடாவும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு, தண்ணீரின்றி, இருளில் சுமார் 11 நாட்களாக உயிருக்கு போராடி வந்த அவரும், இன்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு, பேரழிவு ஏற்பட்டு 11 நாட்களுக்குப் பிறகு, இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த இருவர் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் நேபாள மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மீட்புப்பணி தொடர்ந்து கிடைக்கும் இந்த உயிர் மீட்புகள், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.