சிறுநீரால் இமயமலைக்கு ஆபத்து: பேரழிவின் விளிம்பில் பனிப் பாறைகள்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!
இமயமலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் திறந்தவெளியில் கழிக்கும் சிறுநீர், பனிப்பாறைகளின் வெப்பநிலையை உயர்த்தி, அவை வேகமாக உருகுவதற்கும் வெடிப்புகளுக்கும் காரணமாக இருக்கலாம் என Regional Environmental Change இதழ் எச்சரிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தில் பனிப்பாறையில் ஏற்பட்ட வெடிப்பு பெரும் வெள்ளமாக உருவெடுத்து நேபாளத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பனி பாறையில் ஏற்பட்ட வெடிப்புக்கு எல் நினோ, உலக வெப்பமயமாதல் போன்றவை காரணமாக கூறப்பட்டாலும், இதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான Regional Environmental Change என்ற அறிவியல் ஆராய்ச்சி இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இமயமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு முறையான கழிப்பறை வசதிகள் இல்லாததால் அவர்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து வருகின்றனர்.
அதிலும் எவரெஸ்ட் உள்ளிட்ட மலையேற்றப் பாதைகளில் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் தினம்தோறும் வருகை தருகின்றனர். அவர்கள் திறந்தவெளியில் கழிக்கும் சிறுநீர், அங்குள்ள பனிப்பாறைகளின் வெப்பநிலையை அதிகரித்து அவை வேகமாக உருகுவதற்கு வழிவகுக்கிறது.
மனித சிறுநீரில் உள்ள அதிகப்படியான யூரியா, அம்மோனியா மற்றும் சோடியம் போன்ற உப்புக்கள் உறைந்த பனியின் கட்டமைப்பைச் சிதைத்து அதன் கடினத்தன்மையை பாதிக்கிறது. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பனிபாறை வெடிப்பை சுற்றியுள்ள மலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளும், மலையேற்ற வீரர்களும் அதிக அளவில் சென்று வரும் நிலையில், இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று Regional Environmental Change இதழின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இது மட்டுமே காரணம் இல்லை என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.
மேலும், வரும் காலங்களில் இது போன்ற சிறு காரணங்கள் கூட பனிப்பாறைகளின் தன்மையை சிதைத்து இமயமலை பகுதியின் கீழ் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆபத்தாக மாறலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர, இமயமலையின் பனிப்பாறைகள் உருகி உருவாகும் ஆறுகளையே லட்சக்கணக்கான மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். சிறுநீரில் உள்ள அதிகப்படியான யூரியா , பாஸ்பரஸ் மற்றும் சோடியம் உப்புக்கள் பனியில் கலந்து, நீர்நிலைகளை அடையும் போது குடிநீரின் தரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

