\
UN Warns Global Warming to Breach 1.5°C
Model ImagePTI

'புவி வெப்பநிலை விரைவில் 1.5°Cஐத் தாண்டும்..' எச்சரிக்கை விடுத்த ஐ.நா.!

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவி வெப்ப உயர்வை மீண்டும் 1.5°C வரம்பிற்குள் கொண்டுவர இயலும் எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.
Published on

புவி வெப்பநிலை உயர்வு விரைவில் 1.5°C என்ற ஆபத்தான எல்லையைத் தாண்டும் என ஐநா சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் இனி தவிர்க்க முடியாததாக மாறிவிடும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சூழலால், உலகம் முழுவதும் தீவிர வானிலை மாற்றங்கள் அதிகரித்து, தாழ்வான கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் உயிரின பன்மைத்துவ அழிவும் வேகமெடுக்கும். ஒருவேளை புவி வெப்பநிலை உயர்வு 3°C வரை எகிறினால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் பனிப்பாறைகளின் நிறையில் 25 சதவீதத்துக்கும் மேல் உருகி கடல் மட்டம் 9 முதல் 12.5 சென்டிமீட்டர் வரை உயரும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

Model Image
Model ImagePTI

இத்தகைய மாற்றங்கள் மனித ஆரோக்கியம், குடிநீர் ஆதாரம் மற்றும் உள்கட்டமைப்புகளை நேரடியாகப் பாதிக்கும். சரியான தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2050க்குள் உலகளாவிய உணவு உற்பத்தியில் 14 சதவீத வீழ்ச்சி ஏற்படும். பழைய நிலைக்குக் கொண்டுவரவே முடியாத அளவுக்கு அமேசான் மழைக்காடுகள் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் சுழற்சியில் சீர்குலைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. இப்பாதிப்புகளைக் குறைக்க உலக நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவசரகால எதிர்வினை, தீவிரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நீண்டகாலத் திட்டமிடல் ஆகிய முப்பெரும் வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவி வெப்ப உயர்வை மீண்டும் 1.5°C வரம்பிற்குள் கொண்டுவர இயலும் எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com