நேபாள வெள்ளம் ANI
உலகம்

”நேபாள பெருவெள்ளம்.. 384 சுற்றுலா பயணிகள் மாயம்” சுற்றுலா வாரியம் அறிக்கை!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Premkumar S

நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில், வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

குறிப்பாக, ரசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி, மொத்தமாக நீர் வெளியேறியதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நேபாள வெள்ளம்

இதனிடையே, நேபாள சுற்றுலா வாரியம் வெள்ளத்தில் காணாமல் போனோர் குறித்தான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்களில் 105 பேர் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 384 சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளுக்கான சாலை மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதால், மீட்பு ஹெலிகாப்டர்களால் சில பகுதிகளில் தரையிறங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், புனிதப் பயணத்திற்காக நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 150 கி.மீ வடக்கே உள்ள திமுரே பகுதியில் இந்த பக்தர்கள் சிக்கியுள்ளனர் என்ற அதிர்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், 20 பேர் மட்டுமே தங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கும்பகோணத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட சுற்றுலா ஏஜென்சி உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

நேபாள வெள்ளம்

நேபாளத்தில் பலத்த மழை பெய்யவில்லை என்றாலும், திபெத் எல்லைப் பகுதியில் பெய்த கனமழையே இந்த திடீர் வெள்ளத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தான், மாயமான இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், நேபாளத்தில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து உறவினர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.