இந்திய டிஜிட்டலின் ராஜா ’UPI’.. 10 ஆண்டை கடந்த வெற்றிப் பயணம்! பின்பற்றும் மற்ற நாடுகள்!
UPI அறிமுகமான பத்து ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளது. பரிவர்த்தனை எண்ணிக்கை சுமார் 13,000 மடங்கு உயர்ந்து, மதிப்பு ரூ.0.07 லட்சம் கோடியில் இருந்து ரூ.314 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மே 2026ல் ஒரே மாதத்தில் 230 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய சாதனை என UPI வளர்ச்சியை பாராட்டியுள்ளார்.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
2016 ஆகஸ்ட் 25-ம் தேதி அறிமுகமான ‘ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை இடைமுகம்’ அதாவது UPI, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து மக்களிடையே வேகமாகப் பரவியது. சில்லறை வணிகம் முதல் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வணிகப் பரிவர்த்தனைகள் வரையிலான பணப் பரிமாற்றத்தை UPI எளிமையாக்கியுள்ளது.
UPI தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைப் பயணத்தில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தனது ‘X’ பதிவில் தெரிவித்துள்ளார். UPI-யின் பரவலான பயன்பாடும் அதன் வளர்ச்சியின் அளவும் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சகத் தரவுகளின்படி, 2016-17 நிதியாண்டில் வெறும் 1.78 கோடி UPI பரிவர்த்தனைகள் மட்டுமே நடைபெற்றன. ஆனால், 2025-26 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 24,162 கோடியைக் கடந்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகளில் வருடாந்திர பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சுமார் 13,000 மடங்கு அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பரிவர்த்தனை மதிப்பும் ரூ.0.07 லட்சம் கோடியிலிருந்து ரூ.314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2026 மே மாதத்தில் முதல்முறையாக ஒரே மாதத்தில் 230 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. மே மாதத்தில் 232 கோடியும், ஜூலை மாதத்தில் 2,366 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன. UPI-யுடன் இணைந்த வங்கிகளின் எண்ணிக்கையும் 2016-17ல் 44-ல் இருந்து 2025-26ல் 703 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், பூட்டான், இலங்கை, நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலும் UPI செயல்படுகிறது. இந்த UPI பரிவர்த்தனை, மின்னணு இடைவெளியை குறைத்தல், நிதி சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், மின்னணு நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாடு முழுவதும் தனி நபர்களையும், சமூகங்களையும் வலுப்படுத்தியுள்ளதுடன், பரவலான பொருளாதார பங்கேற்பையும் ஊக்குவித்துள்ளது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது மறுக்க முடியாத ஒன்று.

