\
1,600km undersea cable route can connect Antarctica
AntarcticaANI

அண்டார்டிகாவில் நடக்கும் அதிசயம்? 4,100 கி.மீ இணைய கேபிள்! 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவு!

அதிக மர்மங்கள் நிறைந்த கண்டமான அண்டார்டிகாவில், ஆராய்ச்சியாளர்கள் ஓர் அதிசயத்தை நிகழ்த்தத் தயாராகி வருகிறார்கள்.
Published on

செய்தியாளர் - கார்த்திகேயன்

பூமியின் தென்முனையில் அமைந்துள்ள அன்டார்டிகா கண்டம், மற்ற 6 கண்டங்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. 6 மாதங்கள் வெறும் பகலாகவும், 6 மாதங்கள் வெறும் இரவாகவும் மட்டுமே இருக்கும் இந்த விநோத கண்டம், ’உலகின் மிகப்பெரிய பாலைவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

Antarctica
AntarcticaReuters

மொத்த நன்னீரில் 70 சதவீதம்வரை இங்குதான் பனிக்கட்டிகளாக இருப்பதாகவும், இங்குள்ள பனிப்பாறைகள் உருகினால் கடலின் நீர்மட்டம் 200 அடிவரை உயரும் என்றும் கூறி, விஞ்ஞானிகள் அதிர வைக்கின்றனர். இவ்வாறு பல்வேறு மர்மங்களுக்கும், விநோதங்களுக்கும் பெயர்போன இந்த இடம், உலகின் மற்ற பகுதிகளுடன் தொடர்பே இல்லாமல் இருக்கிறது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மட்டும், ஆராய்ச்சி பணிகளுக்காகச் சுழற்சி முறையில் அங்குப் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு பணியாற்றும் ஆராய்ச்சியாளர்களால், சாதாரண மக்களைப்போல் அங்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடியாது. செயற்கைக்கோள்கள், ஹார்டு டிரைவ்கள் மூலமாகவே அங்குள்ள விஞ்ஞானிகள் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

Antarctica
AntarcticaReuters

இந்நிலையில், அண்டார்டிகாவை உலகத்துடன் இணைக்க கடல் வழியாக இன்டர்நெட் கேபிள் அமைப்பது தொழில்நுட்பரீதியாக சாத்தியம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிலி நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வின்படி, அண்டார்டிகாவில் உள்ள கடலில் இருந்து நிலப்பகுதிக்கு வந்து சேரும் பல்வேறு இடங்களில், பிரத்யேக ஃபைபர் ஆர்டிக் கேபிளை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், ஒரு முனையத்தில் அமைக்கப்படும் கேபிள்களில் இருந்து, நொடிக்கு 15 முதல் 30 தேராபைட் ( Terabits ) வேகத்தில் தரவுகளை அனுப்ப முடியும் என்று கூறப்படுகிறது. சிலி, அர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளால் நடத்தப்படும் ஆராய்ச்சி தளங்களை இணைக்கும் வகையில், தோராயமாக 4,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு 9 முனையங்களை இணைக்கும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதனைச் சாத்தியமாக்க சில சவால்கள் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலங்களில் மட்டுமே கேபிள் பதிக்கும் பணியை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கின்றனர். இதனால், கேபிள் பதிக்கும் பணி, பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Antarctica
AntarcticaReuters

மேலும், இவ்வாறு பதிக்கப்படும் கேபிள்கள் பனிப்பாறைகளால் பாதிக்கப்படால் இருப்பதற்கு, இரட்டைக் கவசம் கொண்ட கேபிள்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். இந்த அறிக்கை உடனடியாக கேபிள் கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அனுமதிகள் மற்றும் நிதியைப் பெறுவதற்கான செயல்முறைகளே சுமார் எட்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம். தற்போது இந்த அறிக்கை சர்வதேச அனுமதி மற்றும் நிதியுதவிக்காக சிலியின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் அண்டார்டிக் கொள்கை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com