முகம்மது யூனுஸ் pt web
உலகம்

வங்கதேச ராணுவத்தில் கிளர்ச்சியா? இந்திய ஊடகங்களை வறுத்தெடுத்த முகம்மது யூனுஸ்!

வங்கதேச ராணுவத்தில் ஸ்திரத்தன்மை நிலவுவதாக சில இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.

அங்கேஷ்வர்

ஒரு சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

குறிப்பாக, லெப்டினன்ட் ஜெனரல் ஃபைசூர் ரஹ்மான் என்பவர் பாகிஸ்தான் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவு பெற்ற வங்கதேச ராணுவ அதிகாரி; இவர், தற்போதைய ராணுவத் தளபதி வகார் உஸ் ஜமானை நீக்க மார்ச் முதல் வாரத்தில் டிவிஷன் கமாண்டர்களுடன் கூட்டங்கள் நடத்த முயன்றதாக கூறப்பட்டது. அவருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுதொடர்பான எச்சரிக்கைகளை தலைமை செயலகம் விடுத்ததை அடுத்து ஃபைசூர் ரஹ்மான் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்திகளை வங்கதேச ராணுவம் மறுத்தது. செவ்வாய் இரவு அன்று ‘இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டரேட்’ இந்த செய்தி முற்றுலும் ஆதாரமற்றது எனத் தெரிவித்தது. வங்கதேச ராணுவம் வலுவாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக கருத்தொன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “வங்காளதேச இராணுவத்திற்குள் ஆட்சிக் கவிழ்ப்பு அல்லது ஸ்திரமின்மை இருப்பதாகக் கூறி, தி எகனாமிக் டைம்ஸ், இந்தியா டுடே மற்றும் பிற இந்திய ஊடகங்களில் சமீபத்தில் வெளியான ஆதாரமற்ற செய்திகள் ஆதாரமற்றவை. அதுமட்டுமல்ல மிகவும் பொறுப்பற்றவை. இதுபோன்ற தவறான தகவல் பரப்புரைகள் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் நம்பகத்தன்மையை கடுமையாகக் குறைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.