சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் பூமி திரும்புவதில் தாமதம்.. கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறு!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்த நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
9 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப், ”அவர்களை தனக்கு முன் இருந்த கையாலாகாத பைடன் அரசால் மீட்டு வர இயலவில்லை என கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து அவர்களை மீட்பதற்கு எலான் மஸ்கிற்கும் உடனடி உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீட்புப் பணிகள் வேகமடைந்தன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வரும் மார்ச் 19 அல்லது 20-ஆம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதமாகியுள்ளது. இருவரையும் அழைத்து வருவதற்காக செல்லவிருந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் ஹைட்ராலிக் சிஸ்டம் கோளாறு ஏற்பட்டதால், அதன் புறப்பாடு தள்ளிவைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்படுமெனில் நாசாவும் ஸ்பேஸ்எக்ஸும் இந்த குழுவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாளை அனுப்ப முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பலமான காற்று வீசுமென்ற காரணத்தால் மார்ச் 13 அன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவது தொடர்பாக சந்தேகம் நிலவியது. இந்தச் சூழல், பொறியாளர்களுக்கு தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யத் தேவையான கால அவகாசத்தை வழங்கியுள்ளது.