”எனக்கு வருத்தமோ, கவலையோ இல்லை” - ’₹’ லச்சினை குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் பிரத்யேக பேட்டி!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை (மார்.14) தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரியில் நடந்த நிலையில், நாளை சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த விளம்பரத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…” எனத் தெரிவித்துள்ளார். ரூபாய்க்கான குறியீட்டிற்குப் பதிலாக "ரூ" என்ற இலச்சினை பயன்படுத்துவது சர்ச்சையை கிளப்பியது. தமிழர் ஒருவர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றுவதா என சிலர் கேள்விகள் எழுப்பினர்.
இந்நிலையில், இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “அரசு முடிவு எடுத்துள்ளது; அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். அதுகுறித்து எனக்கு தெரியவில்லை. தமிழ்நாடு அரசு ‘₹' குறியீட்டை பயன்படுத்தாதது தொடர்பாக எனக்கு வருத்தமோ, கவலையோ இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.