மொஜ்தபா காமேனி X
உலகம்

போருக்குப் பின் முதல்முறை.. வீடியோவில் தோன்றிய மொஜ்தபா காமேனி.. மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி.?

மொஜ்தபா கமேனியின் மரணம் குறித்த தகவல்கள் உண்மையா? தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? என்பது குறித்துப் பார்க்கலாம்.

Premkumar S

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது மரணம் குறித்த செய்தி விரைவில் வெளியாகலாம் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், மொஜ்தபா காமேனி முழு ஆரோக்கியத்துடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள புதிய வீடியோ ஒன்றை ஈரானின் மெஹர் (Mehr) செய்து நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அப்படியானால், மொஜ்தபா கமேனியின் மரணம் குறித்த தகவல்கள் உண்மையா? தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? என்பது குறித்துப் பார்க்கலாம்.

மொஜ்தபா காமேனி

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலின் முதல் நாளிலேயே, அந்நாட்டின் அப்போதைய உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால், அவர் பதவியேற்றது முதல் பொதுவெளியில் அதிகமாக தோன்றவில்லை. மேலும் எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மூலம் மட்டுமே தகவல்களைத் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற அவரது தந்தை அயதுல்லா காமேனியின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் தான், கடந்த வெள்ளிக்கிழமை மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. குறிப்பாக, இஸ்ரேலின் ஜெருசலேம் போஸ்ட் (The Jerusalem Post) “மொஜ்தபா காமேனி வீரமரணம் குறித்த செய்தியை விரைவில் கேட்டால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம்” என ஈரான் அதிகாரிகள் சில தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, மொஜ்தபா உடல்நிலை குறித்த சந்தேகங்கள் சர்வதேச அளவில் தற்போது கவனம் பெற்று வரும் நிலையில் தான், ஈரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் மொஜ்தபா கமேனி இடம்பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அவர் மதம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, மொஜ்தபா கமேனி இடம்பெற்று வெளியாகியுள்ள முதல் வீடியோ இதுவாகும்.

ஆனால், இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால், வீடியோவில் இடம்பெறும் காட்சிகள் மொஜ்தபா கமேனியின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கிறதா என்பது தெளிவாகவில்லை. அதேபோல, இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என ஒரு தரப்பில் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், தற்போது வெளியாகியுள்ள வீடியோ, அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.