அமெரிக்காவை குறிவைக்கும் ஈரான்? 15,000 கிமீ தூர ஏவுகணையால் அதிர்ச்சி! பின்னணியில் வட கொரியா!
ஈரானின் ஏவுகணைத் திறன் குறித்து புதிய தகவல்கள் அமெரிக்க பாதுகாப்பைச் சுற்றி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. முசவி ஃபார்ட், எதிர்காலத்தில் 15,000 கி.மீ. வீச்சு கொண்ட ஏவுகணைகள் உருவாக்க முயற்சி நடப்பதாகவும், அமெரிக்க பிரதான நிலப்பகுதியும் இலக்காக மாறலாம் என எச்சரிக்கிறார். 3,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2,000 கி.மீ. வீச்சு, நிலத்தடி தளங்கள், வட கொரிய தொழில்நுட்பம் ஆகியவை உலகளவில் கவலைகளை அதிகரிக்கின்றன.
செய்தியாளர் - M. மீரா
ஈரானின் ஏவுகணைத் திறன் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய கருத்து, அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின்போது மொஜ்தபா காமேனியின் பிரதிநிதியாக செயல்படும் முசவி ஃபார்ட், ஈரானின் ஏவுகணைகள் எதிர்காலத்தில் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியைத் தாக்கும் அளவுக்கு நீண்ட தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்படலாம் எனக் கூறினார். குறிப்பாக, ஏவுகணைகளின் வீச்சை 15,000 கி.மீ. வரை அதிகரிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க மக்களும் ஏவுகணைத் தாக்குதல்களின் விளைவுகளை உணர வேண்டும் என்ற கடுமையான எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.
ஈரானிடம் தற்போது என்ன உள்ளது?
மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணைத் தொகுப்புகளில் ஒன்றை ஈரான் கொண்டுள்ளது. இஸ்ரேலை தாக்கக் கூடிய அதாவது 2000கி.மீ உள்ளிட்ட பிராந்திய இலக்குகளைத் தாக்கக்கூடிய பல்வேறு வகையான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன.
அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் 2022 மதிப்பீட்டின்படி, ஈரானிடம் 3,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாகக் கூறப்பட்டது. ஷஹாப்-3 (Shahab) , செஜில் (sejjil), கோரம்ஷார் (Khorramshahr missile) போன்ற ஏவுகணைகள் சுமார் 2,000 கி.மீ. வரையிலான தொலைவுகளை அடையும் திறன் கொண்டதாகக் கருதப்படுகின்றன.
மேலும், ஈரான் மலைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள ஆழமான நிலத்தடி ஏவுகணைத் தளங்களையும் உருவாக்கியுள்ளது. எதிரிகளின் வான்வழித் தாக்குதல்களில் இருந்து ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களை பாதுகாப்பதே இவற்றின் முக்கிய நோக்கமாகும்.
ஈரானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டம் தொடர்பாக வட கொரியாவின் பங்களிப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வட கொரியாவின் ஹவாசாங்-15 (Hwasong-15) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் தொடர்புடைய ராக்கெட் தொழில்நுட்பம் ஈரானை சென்றடைந்திருக்கலாம் என்ற தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஹவாசாங்-15 சுமார் 8,000 கி.மீ. தொலைவை அடையும் திறன் கொண்டதாக மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், இந்த தொழில்நுட்பம் ஈரானிடம் முழுமையாக செயல்பாட்டில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் இல்லை.
தற்போது ஈரானிடம் அமெரிக்கப் பெருநிலப்பரப்பைத் தாக்கக்கூடிய, செயல்திறன் நிரூபிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல், அமெரிக்காவைத் தாக்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய செயல்பாட்டு அணு ஆயுதம் ஈரானிடம் இருப்பதாகவும் உறுதி செய்யப்படவில்லை. எனவே, 15,000 கி.மீ. தொலைவு குறித்த அறிவிப்பு எதிர்கால இலக்கைச் சுட்டிக்காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.

