வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கியிருக்கும் விவகாரம் மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார்.
அதைப் பெற்ற ட்ரம்ப், ”நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா” எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் மச்சாடோவும், “நமது சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாக எனக்கு அளித்த பரிசை அவருக்கு வழங்கினேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒருவர், தானாக முன்வந்து பதக்கத்தை வேறொருவரிடம் வழங்கியிருப்பது பேசுபொருளாகியதுடன் எதிர்ப்பும் கிளம்பியது. நோபல் கமிட்டியே, “ட்ரம்பிற்கு மச்சாடோ தாம் வழங்கிய பரிசை வழங்கியிருந்தாலும், நோபல் பரிசு பெற்ற ஒருவரின் அதிகாரப்பூர்வ பட்டத்தை, ரத்து செய்யவோ, பகிரவோ அல்லது மற்றவர்களுக்கு மாற்றவோ முடியாது. இந்த முடிவு இறுதியானது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தும்” எனத் தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில், இதில் அரசியல் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், வெனிசுலா அதிபர் மதுரோவுக்குப் பிந்தைய வெனிசுலாவை வழிநடத்தும் மச்சாடோவின் துணிச்சலான முயற்சியை ஆதரிப்பாரா என்பது குறித்து அதிபர் ட்ரம்ப் எந்தக் குறிப்பையும் வழங்கவில்லை. இந்த நிலையில் நோபல் பரிசை ட்ரம்புக்கு அளித்த விவகாரம் உலகளவில் கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதேநேரத்தில், இதுதொடர்பான விமர்சனங்களுக்கு நோபல் கமிட்டி மீண்டும் பதிலளித்துள்ளது.
"பரிசுத் தொகைக்கு என்ன நடந்தாலும், வரலாற்றில் பரிசைப் பெறுபவராகப் பதிவுசெய்யப்பட்ட அசல் பரிசு பெற்றவர்தான், அதன் வெற்றியாளர். அதில் எந்த மாற்றமுமில்லை. பரிசு பெற்றவர் என்ன செய்யலாம் என்பது குறித்து நோபல் அறக்கட்டளையின் சட்டங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதன் பொருள், ஒரு பரிசு பெற்றவர் இந்தப் பொருட்களை வைத்திருக்க, கொடுக்க, விற்க அல்லது நன்கொடை அளிக்க சுதந்திரமாக உள்ளார். நோர்வே நோபல் குழு, பரிசு பெற்ற பிறகு அமைதிப் பரிசு பெற்றவர்கள் என்ன சொல்லலாம் அல்லது செய்யலாம் என்பது குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான அமைதிப் பரிசு வழங்கப்படும் தருணம் வரை பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பணி மற்றும் முயற்சிகளை மதிப்பிடுவதற்கு மட்டுமே குழுவின் அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், மச்சாடோவின் செயலுக்கு நார்வே அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், சோசலிச இடதுசாரிக் கட்சியின் தலைவர் கிர்ஸ்டி பெர்க்ஸ்டோ, "இது எல்லாவற்றிற்கும் மேலாக, அபத்தமானது. அமைதிப் பரிசை யாருக்கும் கொடுக்க முடியாது. ட்ரம்ப் அதைப் பெற்றதாகக் கூறலாம், ஆனால் அதை மாற்ற முடியாது. மேலும் கிரீன்லாந்தை நோக்கி அவர் மீண்டும் மீண்டும் அச்சுறுத்துவது அவருக்குப் பரிசை வழங்குவது ஏன் பைத்தியக்காரத்தனமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது" என்றார்.
அதேபோல் மையக் கட்சியின் தலைவரான டிரிக்வே ஸ்லாக்ஸ்வோல்ட் வேடு, “பரிசைப் பெற்றவர் யாராக இருந்தாலும் அவர்கள் பரிசைப் பெற்றவர்கள்தான். ட்ரம்ப் பதக்கத்தை ஏற்றுக்கொள்வது அவர் எப்படிப்பட்ட நபர் என்பதைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒஸ்லோவின் முன்னாள் மேயரான ரேமண்ட் ஜோஹன்சன், “மச்சாடோவின் இந்தச் செயல் நோபல் பரிசின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும். பரிசு வழங்குவது இப்போது மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டு ஆபத்தானதாக மாறியுள்ளது, இது அமைதிக்கு எதிரான பரிசை நியாயப்படுத்தக்கூடும்" என்கிறார்.
ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச கொள்கை நிபுணரான பேராசிரியர் ஜேன் ஹாலண்ட் மெட்லரி, ”இது அமைதிப் பரிசுக்கு முழுமையான மரியாதை இல்லாததைக் காட்டுகிறது. ட்ரம்புடனான பேச்சுவார்த்தைகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு வர்த்தகப் பொருளைப் போல மச்சாடோ கொடுக்கிறார். அதற்குப் பதிலாக ட்ரம்ப் மச்சாடோவுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது போல இருக்கிறது" என விமர்சித்துள்ளார்.