பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றின் வலது கரையில் உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியம் (Musée du Louvre) அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியத்தில், சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால், இதுவரை அந்த நகைகள் மீட்கப்படவில்லை. ஐரோப்பாவை உலுக்கிய இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.
உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகங்களில் ஒன்றான லூவரில், கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி, இந்தத் துணிகரக் கொள்ளை நடைபெற்றது. கட்டுமானத் தொழிலாளர்கள் போல வேடமணிந்து வந்த கொள்ளையர்கள், தொழில்துறை பயன்பாட்டுக்கான உலோக வெட்டும் கருவிகளைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தனர். பின்னர், சுமார் 7 நிமிடங்களுக்குள் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 8 விலைமதிப்பற்ற நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு, இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில், பிரான்ஸ் பேரரசர் மூன்றாம் நெப்போலியனின் மனைவி பேரரசி யூஜினிக்குச் (Eugénie de Montijo) சொந்தமான கிரீடம் மற்றும் ப்ரூச் உள்ளிட்ட நகைகளும் இடம்பெற்றிருந்தன. இந்தச் சம்பவம் பிரான்ஸின் வரலாற்றின் மீதான தாக்குதல் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தக் கொள்ளை தொடர்பாக சந்தேகத்திற்குரிய 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்களை காவல்துற விசாரித்துவரும் நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே இருக்கின்றன என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.
பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள ஆபெர்வில்லியே (Aubervilliers) பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில், கண்காணிப்புக் கேமராவில் இந்த நகைகள் கடைசியாகக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு, சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வீடுகள், அடித்தளங்கள், கேரேஜ்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இருப்பினும், எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை.
நகைகள் பாரிஸ் பகுதியிலேயே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது இடைத்தரகர்கள் மூலமாக வேறு நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகளும் கலைப்பொருள் மீட்பு நிபுணர்களும் சந்தேகிக்கின்றனர். வைரங்கள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற கற்களை மறுவடிவமைத்து விற்பனை செய்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் திருடப்பட்ட கலைப்பொருட்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. கொள்ளை நடந்து ஓராண்டு கடந்தும், பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகைகள் எங்கு இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.