மரணம் குறித்து பிரசங்கம்.. அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம்.. பாதிரியார் மீது விழுந்த சிலுவை!
ஈக்வடாரின் குவாயாகிலில் உள்ள நித்திய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்தவர், அருட்தந்தை பட்ரிசியோ அல்ஃபிரடோ சான்செஸ் மோலினாரி. இவர், தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலியின்போது, வாழ்வின் நிலையாமை மற்றும் மரணம் குறித்து மறையுரை (பிரசங்கம்) ஆற்றிக் கொண்டிருந்தார். அதாவது, "ஒரு நாள், இங்குள்ள நாம் அனைவரும் இறந்துவிடுவோம். சில சமயங்களில், நாம் காரியங்களுக்காகச் செலவிடும் நேரத்தைவிட, கடவுளுடன் செலவிடும் நேரமே அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.
இப்படி அவர் பேசிக்கொண்டிருந்த தருணத்தில், பீடத்திற்குப் பின்னால் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய கனமான மரச் சிலுவை எதிர்பாராதவிதமாகத் அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குவாயாகில் உள்ள பேராயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது. மரணத்தைப் பற்றி அவர் குறிப்பிட்ட அதே தருணத்தில் இத்தகைய கோர விபத்து நிகழ்ந்தது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்படதுடன் உலகம் முழுவது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

