\
Trump & Netanyahu
Trump & Netanyahu Reuters

அமெரிக்காவால் ஆபத்து? இந்தியாவை நாடும் நெதன்யாகு!

அமெரிக்காவின் அரசியல் மாற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டம்: இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் இஸ்ரேல்!
Published on: 
Summary

அமெரிக்காவின் அரசியல் மாற்றங்கள் இஸ்ரேலுக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டும் என்று நெதன்யாகு வலியுறுத்தினார். உலக நாடுகளுடன் கூட்டணிகளை மேம்படுத்தி, சர்வதேசத்தில் இஸ்ரேலின் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் - M.மீரா

இஸ்ரேலுக்கு எதிராக எதிர்காலத்தில் அமெரிக்கா திரும்பக்கூடும் என்ற அச்சம் காரணமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் உறவை வலுபடுத்த வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அரசியல் மாற்றங்களைச் சமாளிக்க, இஸ்ரேல் தனது சர்வதேசக் கூட்டணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தேர்தல் அக்டோபர் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தனது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை விளக்கினார். அப்போது, அமெரிக்காவில் எதிர்காலத்தில் ஆட்சி மாறினால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

Benjamin Netanyahu
Benjamin NetanyahuReuters

இதுகுறித்து பேசிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் அதிபராக யார் வந்தாலும், அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அத்தகைய சூழல் ஏற்பட்டால், அமெரிக்காவுடனான உறவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இப்போதே திட்டமிட வேண்டும் என்றும் தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேல் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் அமெரிக்காவை மட்டுமே இஸ்ரேல் அதிகமாகச் சார்ந்திருக்கக் கூடாது என்றும் அதற்குப் பதிலாக, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Modiu & Netanyahu
Modiu & NetanyahuReuters

மேலும் மற்ற நாடுகளுடனும் கூட்டணிகளை உருவாக்க வேண்டும். நமது பிராந்தியத்திலும், அதற்கு வெளியேயும் உள்ள பல நாடுகளுடன் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்தியா ஒரு சிறிய நாடு அல்ல. இதுபோன்று பல நாடுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்துக்கும் பயனுள்ள நாடாக இஸ்ரேல் திகழும் வகையில், தனது திறன்களையும் சர்வதேசக் கூட்டணிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியினருடன் மோதல்!

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை நெதன்யாகு தொடர்ந்து பாராட்டி வருகிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நெருக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே மாதம், இந்தியாவை மிகப்பெரிய சக்தி என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையே தனித்துவமான உறவு இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

Obama & Netanyahu
Obama & NetanyahuReuters

இதற்கிடையே, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரிடையே இஸ்ரேலுக்கு ஆதரவான மனநிலை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர்களான பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் நெதன்யாகுவுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இந்த மோதல்களே ஜனநாயகக் கட்சியினரிடையே இஸ்ரேல் மீதான ஆதரவு குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Trump & Netanyahu
வெள்ளை மாளிகை சாம்பலாகும்.. டிரம்பை அதிரவைத்த ஈரானின் பதிலடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com