அமைதிக்கான நோபல் பரிசு தனக்குத்தான் என முடிவே செய்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில் நேற்று வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் THE PEACE PRESIDENT எனக்குறிப்பிட்டு ட்ரம்பின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர். இப்படியிருக்க, இதற்கு முன்னால் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மற்ற அமெரிக்க அதிபர்கள் யார் என நினைவுகூர்வோம்.
டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைத்தே ஆகவேண்டும் என சமீப காலங்களாகவே தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடந்த சில மாதங்களில் 8 போர்களை தான் நிறுத்திவிட்டதாகவும் கூறி வந்தார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாக கூறுவதையும் நிறுத்தவேயில்லை. தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கம்போடியாவின் ஹன் மானெட், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் டிரம்ப்பை நோபலுக்காக பரிந்துரைத்தும் இருந்தனர்.
இந்நிலையில்தான் இன்று பிற்பகல் நோபல் குழு அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சடோவுக்கு கொடுத்தது. வெனிசுலாவை சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திருப்புவதற்கான அவரது அயராத போராட்டத்தைப் பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அறிவிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஏமாற்றம் அளித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் கனவு தள்ளிப்போய் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபராக இருந்த யாரெல்லாம் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்...
நான்கு அமெரிக்க அதிபர்கள் மற்றும் ஒரு அமெரிக்க துணை அதிபர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். முதலாவதாக, தியோடர் ரூஸ்வெல்ட் (1906) இந்தப் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபராவார். போர்ட்ஸ்மவுத் (Portsmouth) ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்ய-ஜப்பானியப் போருக்கு மத்தியஸ்தம் செய்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது. அவரது பதக்கம் இன்னும் வெள்ளை மாளிகையின் மேற்குப் பிரிவின் ரூஸ்வெல்ட் அறையில் இருக்கிறது.
அடுத்ததாக, உட்ரோ வில்சன் (1919) அமெரிக்காவின் 28வது அதிபரான இவர், முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும், அமைதியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகின் முதல் அரசுகளுக்கிடையேயான அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸை உருவாக்கியதிலும் அவர் ஆற்றிய பங்கிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
மூன்றாவதாக, அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் (2002) பதவியில் இருந்து விலகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதைப் பெற்றார். சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் காணவும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தவும் அவரின் அயராத முயற்சிக்காக இந்த விருதைப் பெற்றார்.
நான்காவதாக,4 4வது அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா (2009). அதிபரான ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான அவரது வாதங்களுக்காகவும், சர்வதேச இராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்காகவும் நோபல் விருதால் கௌரவிக்கப்பட்டார்.
அதோடு முன்னாள் துணை அதிபர் அல் கோர் (2007), காலநிலை மாற்றம் குறித்த அறிவை பரப்புவதற்கான அவரின் முயற்சிகளுக்காக, 2007 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருக்கிறார்.
டிரப்பின் அமைதிக்கான நோபல் பரிசு கனவு இந்த வருடம் நிறவேறாமல் போயிருந்தாலும், வருங்காலத்தில் அவருக்கி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.