அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருடைய கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம், ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசமும் அதன் மாணவர் பிரிவான சத்ரா ஷிப்பூரும் மீண்டும் தங்கள் அரசியல் அந்தஸ்தைப் பெற்றிருப்பதுடன் வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடவும் அனுமதித்துள்ளது.
1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து, வங்கதேசம் பிரிந்து தனிநாடாக உருவானது. அப்போது நடைபெற்ற போரின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேச கட்சி மீது குற்றச்சாட்டு உள்ளது.இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டது; மேலும், தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் கமிஷன் 2018ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தின்போது, வன்முறையைத் துாண்டியதாகக் கூறி, ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேச கட்சிக்கு, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தடை விதித்தார்.
ஆனால், அவர் பதவி விலகிய பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அந்தத் தடையை நீக்கியது. மேலும், கடந்த 2013 தடை உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம், ஜமாத் - இ - இஸ்லாம் கட்சிக்கான தடைகளை நீக்குவதாகவும், மீண்டும் அதை பதிவு செய்யும்படியும் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஜமாத் கட்சி, வங்கதேசத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட பின்னர், தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக அது இப்போது தன்னை மறுபெயரிட முயற்சிக்கிறது. இது, நாட்டில் மாணவர் இயக்கத்தை பெரிய அளவில் எடுத்துச் சென்று, அரசியலில் மீண்டும் நுழைவதற்கு வழிவகுத்துள்ளது. இதனால்தான் வங்கதேசத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள், மாணவர்களின் எழுச்சிக்குப் பின்னால் இருந்த ஜமாத்தின் ஆதரவுடன் யூனுஸ் ஆட்சிக்கு வந்தார் என்றும், அதே நேரத்தில் அவரது விமர்சகர்கள் ஜமாத்தின் ஆதரவுடன் அவர் தனது ஆட்சியை நீட்டிக்க விரும்புவதாகவும் வாதிடுகின்றனர்.
அதேநேரத்தில், ஜமாத்-இ-இஸ்லாமி, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இதுவரை பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனால் கிங்மேக்கராக இருந்துள்ளது. ஷேக் ஹசீனா ஆட்சியின்போது பங்களாதேஷில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) கூட்டாளியாக இது முன்னர் இருந்தது. எனினும், சமீபத்தில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கும் ஜமாத் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 2025க்குள் தேர்தல்களை நடத்துவது என்பது பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், யூனுஸ் நீண்டகாலம் நிலைத்திருப்பதை ஜமாத் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்குக் காரணம், ஜமாத் அமைப்புக்கு தேர்தலில் அணிதிரள அதிக நேரம் அளிக்கிறது.