ஜகார்த்தாவில் வெறிநாய்க் கடி பரவலைத் தடுக்கும் நோக்கில் நாய், பூனை, வௌவால் இறைச்சி விற்பனை, நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்கு நலனுக்கான இந்த முயற்சி பெரும் ஆதரவைப் பெற்றாலும், பாரம்பரிய உணவுப் பழக்கமுள்ள சமூகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில், வெறிநாய்க் கடி பரவலைத் தடுக்கும் முயற்சியாக, நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதிக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதும், நாய் இறைச்சியை உட்கொள்பவர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறிநாய்க் கடி பரவும் விலங்குகள் (நாய், பூனை, வௌவால், குரங்குகள் போன்றவை) உணவாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், விலங்கு நலனை மேம்படுத்தவும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தத் தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தாலும், வணிகர்கள் தங்கள் தொழில்களை மாற்றியமைத்துக் கொள்ள ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் முதல் வணிக உரிமத்தை ரத்து செய்தல் வரை தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தோனேசியா விலங்குகள் உரிமைக் குழுவான 'டாக் மீட் ஃப்ரீ இந்தோனேசியா ' இந்தக் கொள்கையை வெகுவாகப் பாராட்டியுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில், இஸ்லாமிய போதனைகளின்படி நாய் இறைச்சி பொதுவாக உண்பதில்லை. இருப்பினும், சில சமூகங்கள், குறிப்பாக வடக்கு சுமத்ராவில் உள்ள படாக் போன்ற இனக்குழுக்களிடையே, இது ஒரு பாரம்பரிய உணவு அல்லது டெங்கு காய்ச்சலுக்கு வீட்டு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.
நாய் இறைச்சித் தடையை எதிர்ப்பவர்களில் ஒருவரான 36 வயதான அல்ஃபின்டோ ஹுட்டாகோல் பேசுகையில், "இறைவன் அதை உண்பதற்காகவே படைத்துள்ளார். இதன் எதிர்மறையான பக்கத்தை மட்டும் பார்க்காமல், நன்மைகளையும் பாருங்கள். திடீரென இந்த வணிகத்தை நிறுத்த முடியாது, இது சில சமூகங்களின் பாரம்பரியம்" என்று தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், 93% இந்தோனேசியர்கள் நாய் இறைச்சி வர்த்தகத்தை எதிர்ப்பதாகவும், தேசிய அளவில் தடை செய்ய விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது. இந்தத் தடை ஜகார்த்தாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், தலைநகரின் செல்வாக்கு காரணமாக இது பிற இந்தோனேசியப் பகுதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.