Italian Eurofighter Typhoon Reuters
உலகம்

ஹவுதி தாக்குதலால் ஷாக்.. சவூதியைவிட்டு வெளியேறும் படைகள்? சிக்கலில் இத்தாலி!

ஹவுதி ட்ரோன் தாக்குதலால் சவூதி பாதுகாப்புக்கு சவால் ஏற்பட்டுள்ள நிலையில், Taif தளத்தில் இருந்த இத்தாலிய படைகளில் ஒரு பகுதி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது; இதனால் பிராந்திய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் ஏற்கெனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஏமனின் ஹவுதி அமைப்பின் தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. சவூதி அரேபியாவில் ஹவுதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் சிதைவுகள் சவூதி நகரப் பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், காயமடைந்தவர்களில் சவூதி பெண் மற்றும் பாகிஸ்தான் நாட்டவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட தாக்குதலுக்கு ஹவுதிகள் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், சவூதி அதிகாரிகள் ட்ரோன் ஏமனில் இருந்து ஹவுதிகளால் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Houthis

இதனால் சவூதி அரேபியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பாக புதிய சவாலை எதிர்கொள்கிறது. ஹவுதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறிக்க பயன்படுத்தப்படும் interceptor-கள் அமெரிக்காவிடம் குறைந்து வருவதால் உதவி கேட்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம் பிரான்ஸ், பிரிட்டன், பாகிஸ்தான் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளிடம் சவூதி வான் பாதுகாப்பு உதவியை நாடியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சூழலில் சவூதி அரேபியாவில் உள்ள இத்தாலிய ராணுவப் படைகளை வேறு பாதுகாப்பான தளத்துக்கு மாற்ற இத்தாலி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி அரேபியாவின் Taif விமானப்படைத் தளத்தில் இத்தாலியின் 500 வீரர்கள் பணியில் உள்ளனர். இந்த தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய Eurofighter போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குய்டோ க்ரோசெட்டோ ஆகியோர், அங்கு பணியாற்றும் இத்தாலிய வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க சவூதி அரேபியாவிடம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Meloni

இதன் தொடர்ச்சியாக, கணிசமான எண்ணிக்கையிலான இத்தாலிய வீரர்களை Taif தளத்தில் இருந்து சவூதி அரேபியாவிலேயே உள்ள மற்றொரு பாதுகாப்பான தளத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து வீரர்களும் இங்கிருந்து வெளியேற்றப்படவில்லை. அதனால் Taif தளத்தில் இத்தாலியின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈரான் மற்றும் அதன் கூட்டாளியான ஹவுதிகளுக்கு சாதகமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஒருபுறம் சவூதியில் தனது வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் இத்தாலி, மறுபுறம் செங்கடல் மற்றும் Bab el-Mandeb நீரிணையில் தனது ராணுவப் பங்களிப்பை அதிகரிக்கவும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கியமான கடல்வழிகளில் ஒன்றான Bab el-Mandeb வழியாக ஏராளமான சரக்குக் கப்பல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல்கள் செல்கின்றன. இந்தப் பாதை தொடர்ந்து பாதிக்கப்பட்டால், கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி நீண்டபாதையில் செல்லவேண்டிய நிலை ஏற்படும். இதனால் எரிபொருள் செலவு, போக்குவரத்து நேரம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் அழுத்தம் அதிகரிக்கலாம்.

bab el mandeb strait

இதனால், இத்தாலி தனது வணிகக் கப்பல்களின் பாதுகாப்புக்காக நான்கு கடற்படை கப்பல்களை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ஒருமித்த முடிவு எடுக்க தாமதித்தாலும், இத்தாலி தனியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக க்ரோசெட்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஏமனின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஹவுதிகள் தங்களது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஹவுதிகளின் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இத்தாலிக்கு புதிய கவலை எழுந்துள்ளது. செங்கடலில் ஹவுதிகளின் ஆதிக்கத்தால் சீனாவும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஹவுதிகளைக் கட்டுப்படுத்த ஈரான் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டதாக Reuters செய்தி தெரிவிக்கிறது.

Masoud Pezeshkian & Xi Jinping

செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், அது சீனாவின் எரிசக்தி விநியோகத்தையும் பாதிக்கக்கூடும். ஈரானின் கடல்வழி எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதி சீனாவுக்கே செல்கிறது. மேலும், சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் மத்திய கிழக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. 2023-ல் ஈரான்–சவூதி அரேபியா இடையிலான தூதரக உறவை மீண்டும் ஏற்படுத்துவதிலும் சீனா முக்கியப் பங்கு வகித்தது. எனவே, ஈரான் மீது பெய்ஜிங்கிற்கு இருக்கும் பொருளாதார மற்றும் தூதரக செல்வாக்கைப் பயன்படுத்தி பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது முக்கியக் கேள்வியாகியுள்ளது.