islamabad web
உலகம்

இஸ்லாமாபாத்தில் இரவு 8 மணி முதல் சந்தை ஊரடங்கு.. காரணம் என்ன?

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து வரும் மோதலால், ஒரே மாதத்தில் பாகிஸ்தானில் உள்நாட்டு எரிபொருள் விலைகள் 40 சதவீதத்திற்கும் மேலாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து, அவசரக்கால நடவடிக்கைளை பாகிஸ்தான் அமல்படுத்தப்படுகிறது.

PT WEB

வளைகுடாவில் நடக்கும் போரால் தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடி மற்றும் எரிசக்தி விநியோகத்தில் அதிகரித்து வரும் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக பாகிஸ்தான் தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் நேரங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன; வாரம் முழுவதும் கட்டாய மூடல்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஒரே மாதத்தில் உள்நாட்டு எரிபொருள் விலைகள் 40%க்கும் மேல் உயர்ந்ததைத் தொடர்ந்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான்.

islamabad

தற்போது சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் வணிக நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட பணி நேரங்களை இன்று (ஜூன் 1, 2026) முதல் அமலுக்குக் வந்துள்ளது. சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 8:00 மணிக்கு மூடப்படும்; அதேவேளையில் உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்கள் இரவு 10:00 மணி வரை இயங்கும் என்று கூறியுள்ளது பாகிஸ்தான் அரசு.

இந்தக் கட்டுப்பாடுகள், பொதுமக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட வணிக நிறுவனங்களுக்கும், தனியார் வளாகங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் பொருந்தும். புதிய வணிக நேரங்கள், அதிகபட்ச தேவை நேரங்களில் எரிபொருள் மற்றும் மின் நுகர்வைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

islamabad

திருமண மண்டபங்கள், பந்தல்கள் மற்றும் பிற நிகழ்வு நடைபெறும் இடங்களும் இரவு 10:00 மணிக்கு மூடப்படும். மருந்தகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள், விளையாட்டு வசதிகள், அழைப்பு மையங்கள் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள் மட்டும் இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெறுகின்றன என்று அறிவிக்கப்படுள்ளது.

கராச்சியில் ஏற்கனவே நிலையற்ற நிலையில் இருக்கும் நீர் விநியோகம், மின்வெட்டுகளின் காரணமாக மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது, சுட்டெரிக்கும் வெப்பச் சூழலுக்கு மத்தியில் மக்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது. '

மின் விநியோகம் தடைபட்டதன் விளைவாக, நகரில் நாளொன்றுக்கு 85 மில்லியன் கேலன்கள் என்ற அளவில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே — இந்நகரம் கடுமையான நீர் நெருக்கடியிலும் சிக்கித் தவித்து வருகிறது.