\
Benjamin Netanyahu
Benjamin Netanyahuweb

பாலஸ்தீன்| காசாவின் 70%-ஐ ஆக்கிரமிக்க உத்தரவிட்ட நெதன்யாகு.. அடுத்து என்ன நடக்கும்?

நெதன்யாகுவின் சமீபத்திய உத்தரவு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான போரினால் ஏற்கனவே சின்னாபின்னமாகியுள்ள காசா பகுதி, மேலும் ஆழமாக பாதிக்கபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கப்படுகிறது.
Published on
Summary

2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்கு பின் தீவிரமான இஸ்ரேல்-காசா போர் தொடர்கிறது. 72,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நெதன்யாகு காசாவின் 70% பகுதியை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் - M. மீரா

2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-காசா போர் தொடங்கியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல பகுதிகளில் போர் நிறுத்த முயற்சிகள் மற்றும் அமைதி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மோதல்கள் மற்றும் பதற்றங்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட west bank பகுதியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, காசாவின் 50 சதவீதப் பகுதியை தன்வசப்படுத்தி இருந்த இஸ்ரேலிய ராணுவம், தற்பொழுது 60 சதவீதப் பகுதியைத் தன்வசப்படுத்தியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

Hamas
Hamasweb

மேலும் பேசிய அவர் காசா முனையில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் ராணுவக் கட்டுப்பாட்டை 70 சதவீதமாக விரிவுபடுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் படிப்படியாகவும், அடுத்தடுத்த கட்டங்களாகவும் முன்னெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கும் ஹமாஸ் ;

கடந்த 2025 அக்டோபரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலியப் படைகள் 'மஞ்சள் கோடு' (Yellow line) எனப்படும் எல்லைக் கோட்டிற்குப் பின்வாங்கி, காசாவின் 53 சதவீதப் பகுதியை மட்டுமே கட்டுப்படுத்தின.

Gaza tents
Gaza tentsweb

ஆனால், இஸ்ரேல் தற்பொழுது அந்த எல்லைக் கோட்டைத் தன்னிச்சையாக மாற்றி அமைப்பது முந்தைய உடன்படிக்கையை அப்பட்டமாக முறியடிக்கும் செயல் என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. பலவந்தமாகப் புதிய எல்லைகளை உருவாக்குவதன் மூலம் காசாவில் நிரந்தர ராணுவக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இஸ்ரேல் முயல்வதாக ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

அடுத்து என்ன நடக்கும்?

இஸ்ரேலின் இந்த எல்லை விரிவாக்க நடவடிக்கையானது, காசாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீன மக்களை மிகவும் குறுகிய எல்லைக்குள் முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சமீபத்திய அறிக்கையின்படி, இடம்பெயர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் தற்போது நெரிசலான கூடாரங்கள், சேதமடைந்த கட்டிடங்கள் அல்லது தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏற்கனவே சுத்தமான நீர் கிடைக்காமல், மோசமான சுகாதார சூழ்நிலையில் வாழ்ந்து வரும் அம்மக்களின் நிலை பொது சுகாதார அபாயங்களை அதிகரிக்கும்.

Gaza Tent
Gaza Tent web

தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக காசாவின் பெரும் பகுதிகள் இன்னும் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும். சுகாதாரம், மின்சாரம் மற்றும் உணவு விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கடுமையான நெருக்கடியில் இருப்பதால் மேலும் நெருக்கடிக்கு தள்ளப்படும் என்று மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கின்றன.

Benjamin Netanyahu
கறுப்புப் பட்டியலில் இஸ்ரேல், ரஷ்யா படைகள்.. நம்பமுடியாத அதிர்ச்சி அறிக்கை.! என்ன நடந்தது?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com