பேச்சுவார்த்தை நடைபெற்ற செரீனா சொகுசு ஹோட்டலுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தரத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், பின்னர் மறுக்கப்பட்டபோதும், இன்னும் உறுதிப்படுத்தப்படாமலும் உள்ளது.
மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்த அமெரிக்க-ஈரான் போர், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்த அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று கூறி இஸ்ரேல் - லெபனான் மீது கொடிய தாக்குதல்களை நடத்தியதால், அந்த ஒப்பந்தம் உறுதியற்ற நிலையை அடைந்தது. இதைத் தொடர்ந்து, ஈரான் - அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 10-12 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்ப்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாதுகாப்புச் செயலர் அலி அக்பர் அகமதியான், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் அப்தோல் நாசர் ஹெம்மாட்டி ஆகியோரும் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார், உள்துறை அமைச்சர் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோர் இருதரப்புக்கும் இடையே சமரச தூதுவர்களாக செயல்பட்டனர். எனினும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பாக மீண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்ற செரீனா சொகுசு ஹோட்டலுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தரத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், பின்னர் மறுக்கப்பட்டபோதும், இன்னும் உறுதிப்படுத்தப்படாமலும் உள்ளது. அதாவது, அந்த ஹோட்டலுக்கு பாகிஸ்தான் அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து அதன் உரிமையாளரே நேரிடையாக தலையிட வேண்டியிருந்தது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய நிகழ்வுகளின் சில பதிப்புகள், இந்த நிலைமை ஆழ்ந்த நிதி நெருக்கடியைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டன. ஆனால், இது உண்மையில் சரிபார்க்கப்படவில்லை என பிறரால் மறுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தங்குமிடம் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், அமைதி முயற்சிகளுக்குப் பங்களிக்கும் விதமாக தூதுக்குழுக்களை உபசரித்ததாகவும் அகாகான் மேம்பாட்டு வலையமைப்பிற்குச் சொந்தமான செரீனா ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், சில ஆதாரங்கள் அடிப்படையில், அந்த வலையமைப்பு நேரடியாகச் செலவுகளை ஏற்றுக் கொண்டதை மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த விஷயத்தில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. இதனால், இணையவாசிகள் பாகிஸ்தான் அரசைக் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே பாகிஸ்தான் நிர்வாகம் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்காக உலக நாடுகள், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் கடன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.