ஹார்முஸ் நீரிணையை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், தடையை மீறி அப்பகுதியில் பயணிக்கும் எண்ணெய் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், ஈரானின் கப்பல் ஒன்றே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
சோமாலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பண்டார் பெய்லா (Bandar Bayla) மற்றும் ஹஃபுன் (Hafun) ஆகிய கடலோர நகரங்களுக்கு இடையே கடந்த 29-ம் தேதி ஈரானைச் சேர்ந்த 'அசினி' (Azini) எனப் பெயரிடப்பட்ட மீன்பிடிக் கப்பல் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அதில், 21 ஈரானியப் பணியாளர்கள் மற்றும் 2 சோமாலிய பாதுகாப்புப் பணியாளர்கள் என மொத்தம் 23 பேர் இருந்துள்ளனர். இந்தக் கப்பல் தற்போது, சோமாலியக் கடற்கொள்ளையர்களால் இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆயுதம் ஏந்திய 8 கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலில் ஏறி, அங்கிருந்த 2 பாதுகாப்புப் பணியாளர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர், மேலும் 4 பேர் அவர்களுடன் இணைந்ததால், கடத்தலில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கப்பலில் உள்ள பணியாளர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என கடல்சார் காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, கடற்கொள்ளையர்கள் பெரிய கப்பல்களைக் கடத்தி, அவற்றைத் தங்களின் தாய்க்கப்பலாக (Mother Ship) பயன்படுத்துவார்கள். அதாவது, இந்தப் பெரிய கப்பல்களின் உதவியுடன் கடற்கரையிலிருந்து வெகுதொலைவுக்குச் சென்று, அவற்றிலிருந்து சிறிய படகுகளை இறக்கி, சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குவார்கள். அந்த வகையில், தற்போது கடத்தப்பட்டுள்ள அசினி கப்பலையும் கடற்கொள்ளையர்கள் தாய்க்கப்பலாகப் பயன்படுத்தக்கூடும் என இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு மையம் (MSCIO) எச்சரித்துள்ளது.
அதேசமயம், ஏடன் வளைகுடா இந்தியப் பெருங்கடல் பகுதியில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் வணிகக் கப்பல்களைத் தாக்குவது முதல்முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம் முதல் சோமாலிய கடற்பகுதியில் குறைந்தது 15 கடற்கொள்ளை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மட்டும் 3 ஈரானியக் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படைப் பிரிவான ஆபரேஷன் அட்லாண்டா (Operation Atalanta) விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பகுதியில் பயணிக்கும் மற்ற கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களைக் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு, சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சர்வதேசக் கப்பல் போக்குவரத்து குறித்தான புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.