ஈரானின் நடான்ஸ் அணு ஆயுத தளத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் இஸ்ரேலின் Dimona அணுசக்தி நகரின் மீது தாக்குதல் நடத்தியதில், 180 பேர் காயமடைந்தனர். Dimona நகரில் Negev அணு ஆராய்ச்சி மையம் சேதமடைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என IAEA தெரிவித்துள்ளது.
ஈரானின் நடான்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடந்து சில மணி நேரங்களில், இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் பகுதிகள் சிதைந்துபோன இடிபாடுகளாக மாறியதில், 180 பேர் காயமடைந்தனர். ஈரானின் Natanz அணுசக்தி நிலையம் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள Dimona நகர் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் நடான்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் நிலையம் சனிக்கிழமையன்று வான்வழித் தாக்குதலில் தாக்கப்பட்டதாக, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்தது. இதனால் கதிர்வீச்சுக் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஈரான் கூறியது. ஈரானின் முக்கிய செறிவூட்டல் தளமான நடான்ஸ், போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்டிருந்தது. அந்த முந்தைய தாக்குதலால் எந்தவொரு கதிரியக்க விளைவும் ஏற்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கூறியிருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை நடந்த தாக்குதலுக்கு, பதிலுக்குப் பதில் தாக்குதல் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி சித்தரித்துள்ளது
இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள Dimona நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அணு ஆராய்ச்சி மையமான Negev-க்கு சேதம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் கிடைக்கவில்லை எனவும் கதிர்வீச்சு அளவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் IAEA எனப்படும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் Haifa வில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி தனது பதிலடியை கொடுத்துள்ளது. அதோடு தெற்கு இஸ்ரேல் பகுதியுள்ள Arad என்ற பகுதியிலும் ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
’சின்ன இந்தியா’ என்றழைக்கப்படும் டிமோனா
இந்த டிமோனா (Dimona) நகர் முக்கிய அணுசக்தி தளமாக இருப்பதுடன், டிமோனா ’சின்ன இந்தியா’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளது. இங்குள்ள 7,500 பேர் கொண்ட இந்திய-யூத சமூகம், நகரத்தின் மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரில் சரளமாக மராத்தியும், ஓரளவு இந்தி மொழியும் பேசப்படுவதைக் கேட்கலாம். கிரிக்கெட்டிற்கு தீவிர ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், கடைகளில் சோன்பப்டி, குலாப் ஜாமூன், பப்ரி சாட் மற்றும் பேல்பூரி போன்ற உள்ளூர் இந்திய தின்பண்டங்களும் விற்கப்படுகின்றன.
டெல் அவிவில் உள்ள இந்தியத் தூதரகத்தின்படி, இந்தியாவிலிருந்து இஸ்ரேலில் 1950கள் மற்றும் 1960களில் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் (பெனே இஸ்ரேலியர்கள்). ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலானோர் கேரளா (கொச்சினி யூதர்கள்) மற்றும் கொல்கத்தாவைச் (பாக்தாதி யூதர்கள்) சேர்ந்தவர்கள். சமீபத்திய ஆண்டுகளில், மிசோரம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த சில இந்திய யூதர்களும் (பெனே மெனாச்சே) இஸ்ரேலுக்குக் குடியேறி வருகின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் வைர வியாபாரிகளாகவும், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், முதியோர்களைப் பராமரிப்பவர்களாகவும் பணிபுரிகின்றனர். இந்தச் சமூகம் உணவு மூலம் மட்டுமல்லாமல், பாரம்பரியம், பண்டிகைகள் மற்றும் கலாசாரம் மூலமாகவும் தொடர்ந்து ஒன்றிணைந்து வருகிறது. கொச்சினி யூதர் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவர். அதே சமயம், தீபாவளி பண்டிகை ஒரு பெனே இஸ்ரேல் யூதரையும் ஒரு பாக்தாதி யூதரையும் ஒன்றிணைக்கிறது.