Qatar energy
Qatar energy web

ஈரான் பதிலடி.. 800 மில்லியன் டாலரை இழந்த அமெரிக்கா! - பிபிசி ஆய்வறிக்கை!

ஈரான் உடனான போரால் அமெரிக்கா 800 மில்லியன் டாலரை இழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Published on
Summary

பிபிசி ஆய்வின் படி, ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் அமெரிக்கா 800 மில்லியன் டாலர் இழந்துள்ளது. இந்த தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி எனக் கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம், நீடித்த மோதலின் செலவை வெளிப்படுத்துகிறது.

போர் தொடங்கிய முதல் இரண்டு வாரங்களில், மத்திய கிழக்கில் அமெரிக்கா பயன்படுத்தும் இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 800 மில்லியன் டாலர், அதாவது சுமார் 75 கோடி ரூபாய், சேதம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த think tank குழுவான 'சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் ( Center for Strategic and International Studies) வெளியிட்ட அறிக்கை மற்றும் பிபிசியின் பகுப்பாய்வின்படி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. அதற்கு தெஹ்ரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களால் இந்தச் சேதங்களில் பெரும்பாலானவை ஏற்பட்டன என்று கண்டறியப்பட்டுள்ளது.

iran war
iran war file photo

வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்கச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் முழு அளவு தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், 800 மில்லியன் டாலர் என்பது, ஒரு நீடித்த மோதல் அமெரிக்காவிற்கு எவ்வளவு செலவை ஏற்படுத்தும் என்பது குறித்த புரிதலை அளிக்கிறது.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்தச் சேதம் அதிகமானதாகவே தெரிகிறது. கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை அதன் முழு அளவும் தெரியவராது என்று CSIS ஆய்வின் இணை ஆசிரியரான மார்க் கான்சியன் கூறியதாக பிபிசி செய்தி மேற்கோள் காட்டியுள்ளது.

பிபிசி அமெரிக்க பாதுகாப்புத் துறையைத் தொடர்பு கொண்டு இந்த சேதத்தின் அளவு குறித்து கேட்ட போது, அங்குள்ள அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சேதம் குறித்த விவரம்..

ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடாப் பகுதியில் உள்ள பிற நாடுகளில் இருக்கும் அமெரிக்க வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகளை ஈரான் தாக்கியுள்ளது. ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருக்கும் டெர்மினல் ஹை ஆல்டிட்யூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அமைப்பின் ரேடார் பலத்த சேதமடைந்தது. இந்த ரேடார் அமைப்பின் மதிப்பு சுமார் 485 மில்லியன் டாலர்கள் என, பாதுகாப்புத் துறை வரவு செலவு ஆவணங்களை CSIS ஆய்வு செய்ததில் கண்டறியப்பட்டுள்ளது.

iran war
iran war web

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களில் கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தால், வாஷிங்டன் டி.சி.க்கு கூடுதலாக 310 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்ததில், ஈரான் குறைந்தது மூன்று விமானத் தளங்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. மோதலின் வெவ்வேறு கட்டங்களில், குவைத்தில் உள்ள அலி அல்-சலீம் தளம், கத்தாரில் உள்ள அல்-உதெய்ட் தளம் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் தளம் ஆகியவை புதிதாக சேதமடைந்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா 13 இராணுவ வீரர்களை இழந்துள்ளது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம், இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,200-ஐ எட்டியுள்ளதாகவும், அவர்களில் 1,400 பேர் பொதுமக்கள் என்றும் மதிப்பிட்டுள்ளது.

ஈரானால் குறிவைக்கப்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்கள் குறித்த பகுப்பாய்வில், ரேடார் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகளே முக்கியக் குறியாக இருந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்கக் கடற்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, முக்கியமான உபகரணங்களுக்கான பாதுகாப்பு உறைகளான இரண்டு ரேடோம்கள் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டின. அந்த அமைப்புகள் சேதமடைந்திருக்க 'மிகவும் சாத்தியம்' என்று பிபிசி அறிக்கை கூறுகிறது. செயற்கைக்கோள் படங்களை வெளியிடுவதில் அமெரிக்காவைச் சேர்ந்த சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளால் இந்தப் பகுப்பாய்வு தடைபட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

iran drone destroys US radar
iran drone destroys US radar web

குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளமான கேம்ப் அரிஃப்ஜான் மற்றும் அமெரிக்க விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் ஆகிய இடங்களில் உள்ள ரேடார் தளங்கள் தாக்கப்பட்டன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் படங்கள், தாட் (Thaad) அமைப்பின் ரேடார் பாகம் ஒன்றிலிருந்து புகை எழுவதைக் காட்டுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களில் இருக்கும் தாட் அமைப்புகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதை, செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வின் மூலம் பிபிசி அறிக்கை காட்டுவதாகத் தெரிவித்தது. ஆனால், அந்தச் சேதத்திற்கான செலவு என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை.

போரின் முதல் ஆறு நாட்களுக்கு 11.3 பில்லியன் டாலர்கள் செலவானதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. CSIS-இன் படி, முதல் 12 நாட்களுக்கு 16.5 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது.

பென்டகன் போருக்கான நிதியாக மேலும் 200 பில்லியன் டாலர்களைக் கேட்கும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கெட்டவர்களைக் கொல்ல பணம் தேவை என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com