ஈரான் போர் | உணவு உற்பத்தி பாதிப்பு.. விலை உயரும் அபாயம்?
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போரால் எரிபொருள் மற்றும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. யூரியா விலை 50% உயர்ந்துள்ளது. கத்தார் உற்பத்தி நிறுத்தம், உலகளாவிய யூரியா பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போரால் எரிபொருள் தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, உரத் தட்டுப்பாடு காரணமாக உணவு உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக, யூரியா போன்ற உரங்களை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படலாம்
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரானுக்கு இடையேயான போர் 20 நாட்களை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரான் ராணுவத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 46 சதவீத யூரியா உரம் பயணிக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால் யூரியா விலை கடந்த ஒரே மாதத்தில் 50 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு மெட்ரிக் டன் 700 டாலரைத் தாண்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய யூரியா ஏற்றுமதி நாடான கத்தார், தனது எரிவாயு ஆலைகள் தாக்கப்பட்டதால் உர உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளது.
இது உலகளாவிய யூரியா விநியோகத்தில் 14 சதவீதப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதி தடைப்பட்டதால், இந்தியாவில் 3 உர ஆலைகளும், வங்கதேசத்தில் 4 ஆலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் உர இருப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் தற்போது 'வசந்த கால விதைப்பு' தொடங்கிவிட்டது
நெல், கோதுமை, சோயா என அனைத்துப் பயிர்களுக்கும் உரங்கள் மிக அவசியம். இந்தியா தனது 40 சதவீத யூரியா தேவைக்கு வளைகுடா நாடுகளையே நம்பியுள்ளது. உரங்கள் கிடைக்காவிட்டால், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும். உரம் இல்லையெனில், விளைச்சல் குறையும்; விளைச்சல் குறைந்தால் உணவுப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். ஏற்கெனவே 2022 உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டிருந்த உலக உணவுச் சந்தை, இப்போது இந்தப் புதிய போரினால் மீள முடியாத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

