ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் 1 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு வார இடைக்கால போர்நிறுத்தம் அமலான நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது .
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பகர் கலிபாஃப் தலைமையிலான குழுக்கள், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தைகளின் போது இஸ்ரேல் தாக்குதல்களை குறைப்பது, இழப்பீடு வழங்குதல், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்தது.
அதேவேளை, ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அம்சங்களை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. எனினும், 21 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் இது ஈரானுக்கு கெட்ட செய்தி எனவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களிடம் இன்று காலை தெரிவித்திருந்தார். தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இன்று காலையே அமெரிக்கா திரும்பியிருக்கிறார்.
இதற்கிடையில், ஈரான் ஹார்முஸில் பதித்திருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியைத் தொடங்குவதற்காக, இரண்டு அமெரிக்க கடற்படைப் போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) சனிக்கிழமை தெரிவித்திருந்தது. இதனை ஈரானிய ஆயுதப் படைகள் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்கக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கி உள்ளே நுழைகின்றன என்று சென்ட்காம் தளபதி கூறியிருப்பதில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது ஈரான்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இராணுவக் கப்பல்கள் கடந்து செல்ல முயற்சித்தால் அது கடுமையான தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் ஹார்முஸ் ஜலசந்தி இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) யின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது . சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சில நாட்டு கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன என்றும் ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது .