ஏழை - பணக்கார நாடுகள் இடைவெளி அதிகரிப்பு.. ஐ.நா. அறிக்கை!
ஐ.நா. அறிக்கையின்படி, உலக நிதி நிறுவனச் சீர்திருத்தம் உள்ளிட்ட பல நாடுகள் ஒப்புக்கொண்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வராததால், ஏழை-பணக்கார நாடுகளுக்கிடையிலான இடைவெளி ஆபத்தான அளவில் அதிகரித்துள்ளது.
முக்கிய உலகளாவிய நிதி நிறுவனங்களைச் சீரமைப்பது உட்பட, பல நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாகவே இருக்கிறது. இதனால் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளி மேலும் விரிவடைந்து வருகிறது என்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்பெயினின் செவில்லே நகரில் ஐ. நா. உறுப்பு நாடுகள் கூடி ஆண்டு நிதி இடைவெளியைக் குறைக்க ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
அந்த ஒப்பந்தம் இன்னமும் நிறைவேற்ற படாததற்கு முக்கிய காரணம் உலக நாடுகளில் நடக்கும் மோதல்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஈரான் போர் மற்றும் உலக நாடுகளில் நடக்கும் மோதல்களால் உலகப் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள நிலையில், வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கான நிதியுதவியை 23 விழுக்காடு குறைத்துள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் நிதியுதவி 59 விழுக்காடு சரிந்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது. ஏழை நாடுகளின் ஏற்றுமதி மீதான வரிகள் 9 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கூடுதல் வரிகள் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

