Bilawal Bhutto Reuters
உலகம்

சிந்து நதி ஒப்பந்தம் | ”ரத்த ஆறு பாயும்” - மிரட்டல் விடுத்த பாக் தலைவர்.. பதிலடி கொடுத்த இந்தியா!

"எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும் அல்லது அவர்களின் (இந்தியா) ரத்தம் ஓடும்" என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்துள்ளார்.

Prakash J

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் மிரட்டல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக, தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது, பாகிஸ்தான் நாட்டுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதுதொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிலாவல் பூட்டோ

அந்த வகையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவும் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவிடம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று, எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும் அல்லது அவர்களின் (இந்தியா) ரத்தம் ஓடும். சிந்து மாகாணத்தின் வழியாகத்தான் சிந்து நதி பாய்கிறது. சிந்து சமவெளி நாகரிக நகரமான மொஹென்ஜோ-டாரோ அதன் கரைகளில்தான் செழித்து வளர்ந்தது. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நாகரிகத்தின் வாரிசு என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால், அந்த நாகரிகம் லர்கானாவில் உள்ள மொஹெஞ்சதாரோவில் உள்ளது. நாங்கள் அதன் உண்மையான பாதுகாவலர்கள். நாங்கள் அதைப் பாதுகாத்து வருகிறோம். சிந்து மற்றும் சிந்து நதி மக்களுக்கு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான பிணைப்பை மோடியால் துண்டிக்க முடியாது. இந்திய அரசாங்கம் பாகிஸ்தானின் நீர்நிலைகளில் தனது கண்களை வைத்துள்ளது. எனவே, நான்கு மாகாணங்களும் ஒற்றுமையாக இருந்து இதை எதிர்க்க வேண்டும். அப்படி செய்தால்தான் நமது நீர்நிலைகளை பாதுகாக்க முடியும். மோடியின் போர் வெறியையோ அல்லது சிந்து நதி நீரை பாகிஸ்தானிடமிருந்து பறிப்பதற்கான எந்தவொரு முயற்சியையோ பாகிஸ்தான் மக்களோ அல்லது சர்வதேச சமூகமோ பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். பாகிஸ்தானியர்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதால், இந்தியாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானும் அதன் மக்களும் கண்டிக்கின்றோம். பஹல்காம் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை இந்தியா பலிகடா ஆக்குகிறது. இதன்மூலம் அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

அவருடைய இந்தக் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங், “பஹல்காமில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இது வெறும் ஆரம்பம்தான். பிலாவல் பூட்டோ ஒரு முட்டாள். அவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், அவர் இப்படித்தான் கத்திக் கொண்டிருப்பார்" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

மற்றொரு மத்திய அமைச்சரான பியூஷ் கோயல், “பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படாது. பயங்கரவாதத்தைப் பரப்புவதைத் தவிர, பாகிஸ்தானுக்கு வேறு எந்த முன்னுரிமையும் இல்லை. பாகிஸ்தான் மக்கள்கூட இதுபோன்ற அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

சிந்து நதி

சிந்து நதி ஒப்பந்தம் என்பது என்ன?

1960 செப்டம்பரில் பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கையெழுத்தான இந்த சிந்து நதி ஒப்பந்தம், அந்நதிப் படுகையின் ஆறு நதிகளின் நீர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் விநியோகிக்கப்படுகிறது என்பதை நிர்வகிக்கிறது. இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டபோதுகூட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதில்லை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேற்கில் அமைந்துள்ள மூன்று ஆறுகளின் - சிந்து, ஜீலம் மற்றும் செனாப் - 80 சதவிகித தண்ணீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது. பாகிஸ்தானின் 80 சதவிகித விவசாயம் இந்த தண்ணீரை நம்பிதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.