சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.. PAK-ல் உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம் உருவாகும்! விளைவுகள் என்ன?
60 ஆண்டு காலத்திற்கும் மேலாக, உலக வங்கியின் பங்களிப்புடன் நடைமுறையில் இருந்துவந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் உள்ள 16 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் சிந்து நதி படுகையை நம்பியே இருக்கும் நிலையில், அங்கு விவசாயம் பாதிக்கப்படும் என்ற கூறப்படுகிறது. உணவு உற்பத்தி கடுமையாக சரிந்து, ஏராளமானோர் உணவுப் பஞ்சத்திற்குள் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைக்கப்பெறுகிறது. இதனால் அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. சிந்து நதி படுகையை நம்பி வாழும் 61 சதவீத பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
விளைவுகள் என்ன?
முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் தண்ணீர் கிடைக்கப்பெறும் நிலையில், இந்தியாவின் முடிவால் அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி தர்மேலா மற்றும் மங்ளா நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மின் தடை ஏற்பட்டு பாகிஸ்தானின் தொழில்துறை முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் பலன்கள், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காடு என்று கணக்கிடப்படும் நிலையில், கோதுமை, அரிசி, கரும்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பாகிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துவரும் நிலையில், சிந்து, ஜேலம், செனாப் நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நதிநீர் பங்கீட்டை இந்தியா உடனடியாக நிறுத்தினால் அதன் தாக்கம் கடுமையானதாகக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அதிரடி முடிவால், பாகிஸ்தானில் கடன் சுமை,
வேலைவாய்ப்பின்மை மற்றும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் சூழலும் உருவாகியுள்ளது.