thailand reuters
உலகம்

தாய்லாந்துக்குச் சுற்றுலா செல்கிறீர்களா? மிகவும் எச்சரிக்கை.. திட்டம் தீட்டும் இந்தியர்கள்!

தாய்லாந்தில் இந்தியர்கள் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுவதும் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது.

Prakash J

தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது சுற்றுலாப் பயணிகள். உலக நாடுகளைக் கவர்ந்த சுற்றுலாத் தலமாகவும் தாய்லாந்து விளங்குகிறது. இதையடுத்தே, தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. குறிப்பாக மலேசியா, சீனா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகம் சுற்றுலா மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், தாய்லாந்தில் இந்தியர்கள் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுவதும் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது.

thailand

கடந்த ஜூலை 21ஆம் தேதி தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற 3 இந்தியர்கள் பாங்காக்கில் தரையிறங்கினர். அங்கு அவர்கள் கடத்தப்பட்டு, பட்டாயாவில் உள்ள ஒரு சாதாரண இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பணயத்தொகைக்காக சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரம் முழுவதும் அவர்கள் அந்தத் துன்பத்தை அனுபவித்தபிறகு, தாய்லாந்து காவல்துறையினர் அந்த மறைவிடத்தில் திடீர் சோதனை நடத்தி அவர்களை மீட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட அந்தக் கடத்தல்காரர்கள், சக இந்தியர்களே என்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், போலியான குறைந்த விலை சுற்றுலாப் பயணத் திட்டத்தின் மூலம் ஆசை காட்டப்பட்டு, பின்னர் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பணயத்தொகை கோருமாறு அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். அதன்பிறகே, அவர்கள் தகவலின்பேரில் போலீஸுக்குப் புகார் அளித்து மீட்கப்படுகின்றனர்.

thailand

இதில் பாதிக்கப்பட்டவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டோ அல்லது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக குற்றச் செயல்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டோ வருகின்றனர். தாய்லாந்து ஊடக அறிக்கைகளின்படி, துபாயைத் தளமாகக் கொண்ட ஒரு பாகிஸ்தானிய ஏஜென்டால் இந்த திட்டம் அரங்கேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாய்லாந்தில் இந்தியர்கள் இப்படி, சக இந்தியர்களாலேயே கடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த மார்ச் மாதம், இணையவழி மோசடி மையங்களுக்கு இந்தியக் குடிமக்களைக் கடத்துவதில் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்பட்ட, மும்பையைச் சேர்ந்த சுனில் நெல்லத்து ராமகிருஷ்ணன் என்ற கிரிஷ் என்பவர் சிஐடியால் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு, மியான்மர் எல்லையோர மோசடி மையங்களில் இருந்து 283 பேரும், நடப்பு ஜனவரியில், இதேபோன்ற ஒரு நடவடிக்கையில் ஆந்திராவைச் சேர்ந்த 120 பேரும் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.