கம்போடியா நாட்டின் மீது தாய்லாந்து திடீர் வான்வழித் தாக்குதல்! எல்லையில் பதற்றம்.. பின்னணி என்ன?
தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. தாய்லாந்து -கம்போடியா எல்லைக்கோட்டில் அமைந்த ப்ரசத் டா மியூன் தோம் கோவில் மீது பரஸ்பர உரிமை கோரி வருகின்றன.
இதற்கிடையே, சமீபத்தில் கம்போடிய பீரங்கித் தாக்குதலில் தாய்லாந்து அப்பாவி நபர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். தவிர, கம்போடியா வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்று கம்போடியா விவரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசாங்கம் கம்போடியாவின் தூதரை வெளியேற்றியதுடன், தன் நாட்டுத் தூதரையும் அழைத்துக் கொண்டது. இதற்கிடையே, கம்போடியப் படைகள் முதலில் ஒரு ட்ரோனை அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் குற்றம்சாட்டியதுடன், தொடர்ந்து கம்போடிய இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 360 கி.மீ தொலைவில் உள்ள கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான கிழக்கு எல்லையில் சர்ச்சைக்குரிய தா மோன் தாம் கோயிலுக்கு அருகே இன்று அதிகாலை இருதரப்பிலும் மோதல்கள் தொடங்கின. அந்தச் சர்ச்சைக்குரிய எல்லையில் தாய்லாந்தின் ஆறு F-16 போர் ரக விமானங்களில், ஒரு விமானம் கம்போடியாவை நோக்கிச் சென்று ஒரு இராணுவ இலக்கை அழித்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். உயிர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தாய்லாந்து அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் இருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றியுள்ளனர். எல்லையில் உள்ள 86 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40,000 தாய்லாந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
"திட்டமிட்டபடி இராணுவ இலக்குகளுக்கு எதிராக நாங்கள் வான்வழி சக்தியைப் பயன்படுத்தியுள்ளோம்" என்று தாய்லாந்து இராணுவ துணை செய்தித் தொடர்பாளர் ரிச்சா சுக்சுவானோன் தெரிவித்துள்ளார்.
அதுபோல், இதுகுறித்து கம்போடியாவின் பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தனது ஒட்டார் மீஞ்சே மாகாணத்திலும், கம்போடியாவின் பிரியா விஹார் மாகாணத்திலும், தாய்லாந்தின் உபோன் ரட்சதானி மாகாணத்திலும் உள்ள இரண்டு கோயில் தளங்களில் உள்ள இராணுவ நிலைகளைத் தாக்கியதாக ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கம்போடியா எப்போதும் பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு காணும் நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில், ஆயுதமேந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதமேந்திய படையுடன் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கம்போடிய தலைநகர் புனோம் பென்னில் உள்ள ராயல் தாய்லாந்து தூதரகம், ”எல்லையில் நிலைமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மோதல்கள் நீடிக்க வாய்ப்புள்ளதால், தங்கள் நாட்டினர் கம்போடியாவை விட்டு விரைவாக வெளியேற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த தூதரகத்தின் அறிவிப்புக்குப் பிறகு, எல்லையில் கம்போடியப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைக்காக F-16 ஜெட் போர் விமானத்தை நிறுத்தியுள்ளதாக தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, தாய்லாந்து அரசாங்கம் கம்போடியாவுடனான இராஜதந்திர உறவுகளையும் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கம்போடியா தனது அனைத்து இராஜதந்திரிகளையும் தாய்லாந்திலிருந்து திரும்பப் பெறுவதாகக் கூறியதுடன், அனைத்து தாய்லாந்து இராஜதந்திரிகளையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மேலும், தாய்லாந்திலிருந்து எரிபொருள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் இறக்குமதி செய்வதையும் கம்போடியா நிறுத்தியுள்ளது. இதுபோக இருதரப்பினரும் எல்லைப் பகுதிகளை மூடியுள்ளனர். தவிர பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் தென்கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.